ரேஷன் கடைகளில் யூபிஐ (UPI) வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் (G-Pay, Paytm) போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தலாம். முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலைக்கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படிப்படியாக அனைத்து ரேசன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு – மேல்முறையீடு செய்கிறார் ஓபிஎஸ்
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இதுபற்றி கூறும்போது, “அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.
தர்மம், நீதி வென்றது – இபிஎஸ் மகிழ்ச்சி
அதிமுக வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்வார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், நம்மையெல்லாம் வாழவைத்த ஜெயலலிதா ஆகியோர் வழியில் அதிமுக தொண்டர்களையும், திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.
இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.
இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கட்சித் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கேரளா பயணம்
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா புறப்பட்டு சென்றார்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. தென்மண்டல கூட்டத்தில் மாநிலங்கள் இடையேயான எல்லையோர பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு விவகாரம், உள்கட்டமைப்பு, மகளிர் பிரச்சினைகள், அணை நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும்.
இதன் 30-வது கூட்டம் நாளை கேரளாவில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் இன்று மாலை கேரள முதல்- மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசுகிறார். அப்போது கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் இடையேயான அணை நீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்.