ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, “அதிமுகவின் அனைத்து பதவிகளுக்கான நியமனங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் மேற்கொள்ள முடியும். ராஜ்ய சபா எம்.பி தொடர்பான முடிவைக் கூட ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்துதான் எடுத்தோம். இந்நிலையில் தன்னிச்சையாக அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது. கடைசி வரை கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருந்தேன். ஆனால், நீங்கள் வேண்டாம் என என்னை வெளியே தள்ளிவிட்டு முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துள்ளனர்” என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைத்தார்.
இதனையடுத்து, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு மீது பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தனர். இதையடுத்து தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.
ரெப்போ வட்டியை மீண்டும் உயர்த்திய ரிசர்வ் வங்கி: வங்கிக் கடன்களுக்கான வட்டி உயரும்
அதிகரித்து வரும் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி, வர்த்தகம், தொழிலில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செங்கல்பட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, “உலக புகழ்பெற்ற தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் வந்து செல்போன் உற்பத்தியை தொடங்குவது பெருமை அளிக்கிறது. புதிய தொழிற்சாலை மூலம் 14,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதன் மூலம் அந்த வட்டாரம், மாவட்டம் வளர்ச்சி அடைகிறது.
அகில இந்திய அளவில் வணிகம் செய்வதில் எளிதான மாநிலம் என்ற பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. புத்தாக்க தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறோம். உற்பத்தியில், வர்த்தகத்தில், தொழிலில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்: பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும் மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பை சென்ட்ரல் வரை இந்த புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையின் தொடக்க விழாவிற்காக குஜராத் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கொடியசைத்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளார்.
வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் ஆகும். வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதன் மூலமாக பயண நேரம் 25 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரையிலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்த செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. அதை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய டெக்சாசில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. மத்திய டெக்சாசில் உள்ள மெரிக்கோரில் குடியிருப்பு பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர். ஒரு பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் காதலன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் சுட்டுக் கொன்றுள்ளான். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அந்த வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த துப்பாக்கி சூடு காரணமாக அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.