இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே, தாய்லாந்தில் தற்காலிகமாக சரணடைந்தார்.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோட்டபய ராஜபக்சே, அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் ஏறத்தாழ ஒரு மாதம் காலம் ராஜபக்சே தங்கியிருந்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் தங்குவதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அவர் தாய்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.
தாய்லாந்தில் அவர் 90 நாட்கள் தங்கியிருக்க அந்நாட்டு அரசு மனிதாபிமான முறையில் அனுமதி அளித்துள்ளது. அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
மகளிர் இலவச பேருந்துகள் முழுமையாக ‘இளஞ்சிவப்பு’ நிறத்துக்கு மாற்றம்
தமிழகத்தில் உள்ள மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகளுக்கு ‘இளஞ்சிவப்பு’ நிறம் பூசப்படும் என்று ஏற்கனவே மாநகராட்சி அறிவித்தது. அதன்படி இலவச பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் ‘இளஞ்சிவப்பு’ நிறம் பூசப்பட்டது. மீதமுள்ள இரு பக்கவாட்டு இடங்களும் செலவு கட்டுப்பாடுகள் காரணமாக அப்படியே விடப்பட்டன.
இந்நிலையில் பேருந்துகளில் பாதி மட்டுமே ‘இளஞ்சிவப்பு’ நிறம் அடித்தது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதையடுத்து மகளிர் இலவச மாநகர பேருந்துகள் முழுமையாக ‘இளஞ்சிவப்பு’ நிறத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. இதற்காக ‘இளஞ்சிவப்பு’ நிறம் பூசப்பட்ட பஸ்களின் இருபுறமும் பக்கவாட்டில் அதே நிறத்துடன் ஒரே மாதிரியாக தோன்றும் வகையில் விளம்பரத்துக்கு வாடகைக்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த விளம்பரங்களுக்கு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 ரயில் நிலையங்களில் மருத்துவ உதவி மையங்கள்
சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட சில முக்கிய ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்கள் உள்ளன.
இந்நிலையில், மேலும் பல நிலையங்களில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘பயணிகள் அதிகமாக இருக்கும் ரயில் நிலையங்களில், இலவச மருத்துவ உதவி மையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், விழுப்புரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய 5 நிலையங்களில் இலவச மருத்துவ உதவி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவமனைகள் சார்பில், இம்மையங்கள் அமைக்கப்படும்’’ என்றனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு 15-ம் தேதி விடுமுறை
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் வரும் 15-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் தொடர்புடைய கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி
மதுரையில் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த போது விடுதி மாடியில் இருந்து பள்ளி மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு 3500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளின் விடுதி இருக்கிறது. ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு என்பதால் காலையில் விடுதியில் முதல் மாடிக்கு சென்று படித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
உடனே அங்கு இருந்த விடுதி வார்டன் மற்றும் ஆசிரியைகள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.