சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைக்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு மோடி வருகிறார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை வரவேற்கின்றனர். நாளை தமிழ்நாடு ஆளுநா் மாளிகையில் தங்கும் பிரதமா் மோடி, மறுநாள் ஜூலை 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
பிரதமா் வருகையையொட்டி, சென்னையில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் டிரோன்கள், சிறிய வகை ஆளில்லாத விமானங்கள், பாராசூட்டுகள் ஆகியவற்றுக்கு ஜூலை 28, 29ஆம் தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல காற்று பலூன்கள், வாயு பலூன்கள் பறக்க விடுவதற்கும் தடை விதித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ (#GoBackModi) டிவிட்டரில் டிரண்டாவது வழக்கம். இம்முறை, நாளை மோடி வரவுள்ள நிலையில் இன்றே ட்விட்டரில் ‘கோபேக்மோடி’ முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் தொடக்க விழாவுக்கான அனைத்து விதமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு அரங்கில் ஆங்காங்கே பிரமாண்ட செஸ் காய்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர ஒலிம்பியாட் போட்டி சின்னமான ‘தம்பி’ உருவ பொம்மைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன. விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் வைக்கும் பணியும் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்குக்கு நேரில் சென்று நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பிரதமர் மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக இந்திய பிரதமர் மோடி நாளை வருவதையொட்டி சென்னையில் முக்கிய பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து செண்ட்ர்ல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.
இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடஙக்ளைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயக படுகொலை‘ என்ற வாசகம் அடங்கிய முககவசம் அணிந்து நாடாளுமன்றம் வந்த திமுக எம்பிக்கள்
நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், இதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுவதால், முதல் நாளில் இருந்தே தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது. இதனால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இதனிடையே விலைவாசி உயர்வை எதிர்த்து மாநிலங்களவையில் குரல் கொடுத்த திமுக எம்பிக்கள் 6 பேர் உட்பட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவைக்குள் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் 7வது நாளாக நேற்றும் முடங்கியது.
இந்நிலையில் இன்று ஜனநாயக படுகொலை என்ற வாசகம் அடங்கிய முககவசம் அணிந்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தனர். இதனிடையே, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சதுப்பு நிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்: வனத்துறைக்கு முதல்வர் பாராட்டு
தமிழ்நாட்டில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டம் கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கரிக்கிலி பறவைகள் காப்பகம் ஆகியவை தற்போது ஈர நிலங்களுக்கான உலகின் மதிப்பு மிகுந்த ராம்சர் அங்கீகாரத்தை பெற்றுள்ளன. ஏற்கனவே இவ்வங்கீகாரத்தைப் பெற்ற கோடியக்கரையையும் சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை நான்காக ஆகியுள்ளது. இத்தகைய நிலையை எட்டியிருப்பதற்காகத் தமிழ்நாடு வனத்துறையைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ராம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ராம்சர் உடன்படிக்கையின் குறிக்கோளாகும். ராம்சர் அங்கீகாரம் என்பது தேசிய மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பிற்கும், இயற்கை வளங்களை அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஈரநிலங்களை பாதுகாப்பதற்கும் வழிவகுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.