சென்னை எழிலகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் திட்ட குழுவின் 3ஆவது கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மகளிர் இலவசப் பேருந்து திட்டம் என்பது இலவசமல்ல; ஒரு பொருளாதார புரட்சி. இலவச பேருந்து திட்டத்தால் பயனடைந்தவர்களில் 80 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பினர். அதாவது, கிராமப்புற, ஏழை, எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதார புரட்சியே மகளிர் இலவசப் பேருந்து திட்டம். திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு இந்த திட்டம்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்வு
தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 வரை உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனிடையே ஒரு நிறுவனம் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியுள்ளது. அதே நிறுவனம் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தி உள்ளது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன. இதன் காரணமாக பால் சார்ந்த பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் பால்கள் நீலம், பச்சை, ஆரஞ்சு என்று மூன்று வகையாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி நீலம் பால் லிட்டருக்கு ரூ. 40, பச்சை பால் லிட்டருக்கு ரூ. 44, ஆரஞ்சு பால் லிட்டருக்கு ரூ. 48 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களின் பால்கள் ரூ. 54 முதல் 72 வரை விற்பனையாகிறது. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
தாய் மொழியை உள்வாங்கிக் கொண்டால் அறிவியல் எளிதாக புரியும் – விஞ்ஞானி கலைச்செல்வி
இந்திய அறிவியல் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள கலைச்செல்வி காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘தாய்மொழியை முழுமையாக உள்வாங்கிக்கொண்டால், நம்மால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மிக எளிதாக, மிகச் சரியாக புரிந்துகொள்ள முடியும். அதன்மூலம் அந்த துறையில் மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்பதை நான் ஆழமாக நம்பினேன். அந்த நம்பிக்கைதான் இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது” என்று கூறினார்.
இந்தியா முழுவதும் 4,500 விஞ்ஞானிகள் பணியாற்றும் 38 ஆராய்ச்சி மையங்களுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் விஞ்ஞானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடக்கம் செய்ய பணம் இல்லாததால் குழந்தையின் உடலை குப்பை தொட்டில் வீசிய தந்தை: சென்னையில் துயரம்
சென்னை திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் உள்ள குப்பை தொட்டியில் சணல் பையில் பச்சிளம் குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் இழுத்துச் செல்வதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்து, குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையை அவரது கணவர் தனுஷ் குப்பைத் தொட்டியில் வீசி சென்றது தெரிய வந்தது.
தனுஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, “கவிதா எனக்கு 2-வது மனைவி. முதல் மனைவி இறந்துவிட்டார். அவருக்கு பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது. இந்நிலையில் 2-வது மனைவிக்கு பிறந்த குழந்தையும் இறந்துவிட்டதால், துக்கம் தாங்க முடியாமல் இருந்தேன். மேலும் குழந்தையை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், சணல் பையை வாங்கி அதில் குழந்தையை போட்டு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்தேன்” என வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து ‘உறவுகள்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பச்சிளங் குழந்தை உடல் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தியா எதிர்ப்பை மீறி இலங்கை துறைமுகத்தில் சீனா, பாகிஸ்தான் கப்பல்கள் நிறுத்தம்
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 இலங்கை அம்பந்தட்டை துறைமுகத்தில் 6 நாட்கள் நிறுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ள இலங்கையிடம் சீனா அனுமதி கேட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், யுவான் வாங்க் 5 உளவு கப்பலை இலங்கைக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது. தற்போது அந்த கப்பல் இலங்கையின் அம்பந்தட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த சர்ச்சையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கருவிகள், லேசர் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகளை கொண்ட வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பந்தட்டை துறைமுகம் இலங்கை தலைநகர் கொழும்புக்கு மிக அருகில் உள்ளது. சீனாவின் உளவு கப்பல் இங்கிருந்து தமிழ்நாடு உள்பட தென்இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளங்களை வேவு பார்க்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்களால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது.