ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. அதில், “அதிமுகவின் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தில் இந்திய பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, நேற்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கு இரவு தங்கினார். இன்று காலை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர், 15வது குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளார். மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிலுவை தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் புதிய விமான நிலையம்: 12 கிராம மக்கள் எதிர்ப்பு
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தங்கள் பகுதிக்கு விமான நிலையம் வேண்டாம் என சுமார் 12 கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இன்று 12 கிராம மக்களின் முக்கியஸ்தர்களை அழைத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் அமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக மக்கள் நல்லுறவு மையத்தில் 12 கிராம மக்கள் அமர வைக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கிருந்து ஒவ்வொரு கிராமமாக அழைத்து அதன் அருகில் உள்ள மற்றொரு அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வந்திருந்த கிராம முக்கியஸ்தர்கள் “எங்களை தனித்தனியாக அழைத்து கூட்டம் நடத்தக் கூடாது. கூட்டம் துவங்குவதாக சொல்லி இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் துவங்கவில்லை. இனிமேல் நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள்” எனக் கூறிவிட்டு வெளியேறினர். இதனால் கூட்டம் நடைபெறாமல் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், கிராம மக்கள் “வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்! வேண்டும் வேண்டும் விவசாய நிலங்கள் வேண்டும்!” என கோஷமிட்டவாறு கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் டிஜிட்டல் டிக்கெட்: போக்குவரத்துத் துறை முடிவு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கும் காதித பயண சீட்டுதான் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
இதை முதலில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் மதுரை, கோவை அரசு போக்குவரத்து கழகங்களில் அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.