தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தல், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு, திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆ. ராசாவுக்கு துணை நிற்போம் – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணைநிற்கிறது.
தமிழர்களுக்குச் சூத்திர (வேசி மக்கள்) பட்டத்தைச் சூட்டி, மனு தர்மத்தை நிலைநிறுத்த எந்த இந்து மதத்தைப் பயன்படுத்திக்கொண்டார்களோ, அந்த மதத்தைத் தோலுரித்து தமிழர்கள் மீதான இழிவைப் போக்கவே அண்ணன் ஆ.ராசா அவர்கள் தனது இனமானக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். வர்ணாசிரமத்தின் பெயரால் பல நூறு ஆண்டுகளாக மண்ணின் மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ளப் பழிச்சொல்லை தாங்கிய வலியின் மொழிதான் அண்ணன் ஆ.ராசா அவர்களது வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது. சனாதன கோட்பாடுகளுக்கு எதிரான அண்ணன் ஆ.ராசா அவர்களின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து, என்றைக்கும் துணைநிற்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் நீராதாரம் மோசமாக உள்ளது: வல்லுநர்கள் கருத்து
கோவையில் ‘தண்ணீர் 2022’ கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தண்ணீர் மேலாண்மைதுறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்றனர். இக்கருத்தரங்கில் அவர்கள் பேசும்போது, “நாட்டில் பல மாநிலங்களில் நீராதாரங்களின் நிலை மிக மோசமாக உள்ளது. கால நிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமாகும். இமயமலையில் பனிச் சிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் வெள்ளம், வறட்சி போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது. கடல்நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கேரளா, ஒடிசா, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் ரசாயனங்கள் மற்றும் கிருமிகளால் மாசடைந்து வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை நீர் ஆதாரங்களின் நிலையை பருவமழை தான் நிர்ணயம் செய்கிறது. தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெங்களூரு நகரில் சமீபத்தில் காணப்பட்ட வெள்ள பாதிப்பு இதற்கு சிறந்த சான்றாகும்” என்றனர்.
கீழடியில் தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுப்பு
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ம் தேதியிலிருந்து 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் ஆன பகடை, காதில் அணியும் அணிகலன், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது தந்தத்தால் ஆன பெரிய மணி (அணிகலன்) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன. இந்த மணியின் நீளம் 5.6 செ.மீ., மொத்த விட்டம் 4 செ.மீ. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு வழுவழுப்பாகக் காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக இருந்தன.
தைவானை சீனா தாக்கினால் அமெரிக்கா பதிலடி தரும்: ஜோ பைடன்
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா, எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டு தைவானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதற்கு பின்னரும், அமெரிக்க எம்.பி.க்களும், அமெரிக்க மாகாண ஆளுநர்களும், தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அமெரிக்கா – சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே தைவானுக்கு சுமார் 8,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அதிபர் ஜோ பைடன் அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோ பைடன், தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் அமெரிக்க படை வீரர்கள் தைவானை பாதுகாப்பார்கள் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனால், நேர்காணலுக்கு பிறகு பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை. தைவான் தன்னை தானே தற்காத்துக்கொள்ள மட்டுமே அமெரிக்கா ராணுவ உதவி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.