தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கோரியிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அக்டோபர் 2-ம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழ்நாடு தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தன. இதற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கருக்கலைப்பு யாருக்கு, எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போழுது தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், “சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள். திருமணமாகாத பெண்களுக்கும் 20 முதல் 24 வார கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு. கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது” என தெரிவித்துள்ளது.
திருச்சியில் பரவும் 5 பேருக்கு‘ஸ்கிரப் டைப்பஸ்’ காய்ச்சல்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ‘ஸ்கிரப் டைப்பஸ்’ எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்ட 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மருத்துவமனை முதல்வர் டி. நேரு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த வகை காய்ச்சல் நாய், பூனை, மாடுகள் மேல் வளரும் ஒட்டுண்ணிகள் அல்லது மண்ணில் உள்ள ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் பரவும் தன்மை கொண்டது. எனவே, செல்லப்பிராணிகளை தொட்டு விளையாடுபவர்கள், மண்ணில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் ஒட்டுண்ணியால் கடி பெருவதன் மூலம் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த நோய் ஏற்பட்டால், காது மடல், அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவான பகுதிகளில் தடிப்புகள், கொப்புளங்கள் அல்லது சொரி ஏற்படும். அதைத் தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஆகியவை ஏற்படும். இந்த அறிகுறிகள் கண்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பகட்டத்திலேயே இதைக் கண்டறிந்தால், எளிதாக மாத்திரைகள் மூலமாகவே நோயை உடனடியாக குணப்படுத்த முடியும். சரியாக கவனிக்காமல் நோய் பாதிப்பு தீவிரமடைந்தால், மூளைக்காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பங்குச் சந்தை சரிவு எதிரொலி: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்துக்கு இறங்கிய அதானி
இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து சரிவு காணப்பட்டு வருகிறது. இதனிடையே நேற்றைய தினம் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்த நிலையில், கவுதம் அதானி 3.6 பில்லியன் டாலர் (ரூ.29,480 கோடி) இழப்பைச் சந்தித்தார். இதையடுத்து போர்ப்ஸ் இதழின் நிகழ்நேர உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், அதானி 138.4 பில்லியன் டாலர் (ரூ.11.33 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு பின்நகர்ந்துள்ளார்.
நேற்றைய தினம் முகேஷ் அம்பானியும் இழப்பைச் சந்தித்தார். நேற்று 1.6 பில்லியன் டாலர் (ரூ.13,102 கோடி) இழப்பைச் சந்தித்த முகேஷ் அம்பானி 83.4 பில்லியன் டாலர் (ரூ.6.82 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு போர்ப்ஸ் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.
போர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 259.8 பில்லியன் டாலர் (ரூ.21.27 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு எலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் 142 பில்லியன் டாலர் (ரூ.11.62 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு 2- வது இடத்திலும், 137.8 பில்லியன் டாலர் (ரூ.11.28 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 4-வது இடத்திலும் உள்ளனர்.
சோழர்களின் சாதனையை நாம் உண்மையில் உணரவில்லை: ஆனந்த் மகேந்திரா ட்விட்
மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பல சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து ஆக்டிவாக இருப்பவர். இவர் தற்போது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை வியந்து ஒரு பாராட்டிய பதிவைப் பகிர்ந்துள்ளார். ஷ்ராவன்யா ராவ் பீட்டி எனும் பிரபல டிசைனர் பதிவிட்ட தஞ்சை பெரிய கோவில் பற்றிய சிறிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, “உலக அளவில் நமது சரித்திரத்தை கொண்டு செல்ல மறந்துவிட்டோம். சோழப் பேரரசு எவ்வளவு சாதனை படைத்தது, சக்தி வாய்ந்தது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியது என்பதை நாம் உண்மையில் உள்வாங்கவில்லை. உலக அளவில் தஞ்சை கோயிலுக்குக் கிடைக்க வேண்டிய எந்த பாராட்டும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை’’ என்று தெரிவித்துள்ளார்.