சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடமில்லை என எந்த தனியார் கல்லூரியும் மறுக்கக்கூடாது எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர இதுவரை 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுபோல் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
நாளைக்குள் கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை பெற்று கொள்ள வேண்டும்: பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவியின் மரண வழக்கு தொடர்பாக, மாணவியின் உடலை பெற்றோர் வாங்க ஆணையிடக்கோரும் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், “நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவி உடலை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏன்? நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா? மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள். பெற்றோர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர். இறுதிச் சடங்கை கண்ணியமாக நடத்துங்கள். மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும். மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கள்ளக்குறிச்சி மாணவி உடல் பிரேத பரிசோதனை அறிக்கைகளை 3 பேர் கொண்ட புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அரசு நிகழ்ச்சியில் புரோகிதரை வெளியேற்றியது ஏன் – திமுக எம்.பி செந்தில் குமார் விளக்கம்
தருமபுரி தொகுதியில் ஏரி சீரமைப்பு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு இந்து மத சடங்குகளின்படி பூஜை செய்ய வந்த புரோகிதரை அங்கிருந்து வெளியேற்றிய மக்களவை திமுக உறுப்பினர் டாக்டர் செந்தில் குமாரின் செயல் சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், இது குறித்து பிபிசிக்கு பேட்டியளித்துள்ள செந்தில் குமார், “அரசு நிகழ்ச்சி என்பது மக்கள் வரிப்பணத்தில் எல்லா மக்களுக்குமானதாக செய்யப்படும் விஷயம். அதை பொதுவானதாகவே நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் முன்கூட்டியே கூறுவேன். அதையும் மீறி சில வேளைகளில் இதுபோன்ற செயல்கள் தொடரும்போது, அதை அப்படியே கடந்து விட்டு என்னால் செல்ல முடியவில்லை. அதனால்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைத்தேன். அரசு நிகழ்ச்சியில் ஒன்று எந்த மத சடங்குமில்லாமல் செய்யுங்கள், இல்லை எல்லா மதம் சார்ந்து எல்லோரையும் சேர்த்து செய்யுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன். இப்போது என் செயல் ஒரு விவாதத்தைத் தூண்டியிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவடைந்திருக்கிறது. பலரும் இதுபற்றி பேசுகிறார்கள். நல்ல தீர்வு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை” என்று கூறியுள்ளார்.
இலங்கை போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல்
இலங்கையில் பாதுகாப்புப் படையினர் தலைநகர் கொழும்புவில் உள்ள முக்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்ட முகாம்கள் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தி கூடாரங்களை அகற்றினர். இதில் போராட்டக்காரர்கள் பலர் படையினரால் தாக்கப்பட்டனர்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியே இருந்த போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குச் சில மணிநேரத்திற்கு முன்னதாக, நூற்றுக்கணக்கான துருப்புகள் மற்றும் போலீஸ் கமாண்டோக்கள் போராட்டக்காரர்களை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில் பிபிசி வீடியோ செய்தியாளர் ஜெரினும் ராணுவத்தால் தாக்கப்பட்டார். அதோடு, ‘ராணுவ வீரர் ஒருவர் அவருடைய கைபேசியைப் பறித்து, அதிலிருந்து வீடியோக்களை அழித்தார்’ என்று பிபிசி தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாடாளுமன்றம் மீது திட்டமிட்டு தாக்குதல்: ட்ரம்ப் மீது விசாரணை அறிக்கையில் புகார்
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிட்டோல் மீது, 2021 ஜனவரி 6ஆம் தேதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் தாக்குதல் நடத்தினர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்று அளிக்கும் பணியில், நாடாளுமன்ற ஊழியர்கள் ஈடுபட்டு இருந்த போது, உள்ளே புகுந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலை ட்ரம்ப் திட்டமிட்டே நடத்தினார் என்று விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் நடப்பதை உணவு அருந்தும் அறையில் அமர்ந்தபடி தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே ட்ரம்ப் ரசித்துக் கொண்டு இருந்தார் என்றும் விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.