காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும், அவரை எதிர்த்து கேரள எம்பி சசிதரூரும் களம் இறங்குவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இன்று சோனியா காந்தியை சந்தித்த பிறகு அசோக் கெலாட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், “ராஜஸ்தானில் ஏற்பட்ட நெருக்கடியால் நான் வருத்தம் அடைந்தேன். சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரினேன். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு நான் போட்டியிடவில்லை” என்று கூறினார்.
அசோக் கெலாட் விலகல் எதிரொலி: திக்விஜய் சிங் போட்டி
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் பணிகளில் இருந்த திக்விஜய் சிங், இதற்காக டெல்லி வந்துள்ளார். இது தொடர்பாக, ‘டெல்லி வருவதற்கான எந்த திட்டமும் என்னிடம் இல்லை. இந்தத் தேர்தலுக்காக நான் டெல்லி வந்திருக்கிறேன். நான் காந்தி குடும்பத்துடன் இன்னும் பேசவில்லை. ஆனாலும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்’ என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும்: காவல்துறை சீராய்வு மனுத்தாக்கல்
தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் கடந்த 22ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அக்டோபர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென கூறியிருந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை மறு சீராய்வு மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், “பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை விதிக்கப்பட்டதால் தற்போதைய பேரணியால் தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது; எனவே, பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்க நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்: வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கோவை தெற்கு பாஜக சட்டமன்ற வானதி சீனிவாசன், “ஆர்.எஸ்.எஸ். அரசியலமைப்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கும் ஜனநாயக இயக்கம். 97 ஆண்டுகள் நிறைவு செய்து 98வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அரசியலமைப்பு சட்டப்படி இயங்கும் அமைப்புக்கு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த, பொதுகூட்டம் நடத்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை பறிப்பது ஜனநாயகத்தை முடக்கும் பாசிச நடவடிக்கை.
இது போன்ற இடையூறுகளை வைத்து தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்கி விடலாம் என யாராவது கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அடுத்த சில ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டிலும் தொடங்கப்பட்டது. 1940இல் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையத்தில் நடந்த பயிற்சி முகாமில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு பேர் பங்கேற்றனர்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை: காயத்தால் பும்ரா விலகல்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பும்ரா விலகியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசில் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் எழுதினர். இதே போல், 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், 1901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிகளில் உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜீலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்து. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், குரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் எனவும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.