காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மிச்செல் லீ என்ற வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி முதன் முதலாக காமன்வெல்த் தங்கம் வென்றார் பி.வி.சிந்து. இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 19ஆகவும் மொத்த பதக்கங்கள் 56ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஷாட்களையும் வாலிகளையும் சர்விஸ்களையும் அபாரமாக வீசிய பி.வி. சிந்து முதல் செட்டில் தொடக்கத்தில் 3-1 என்று முன்னிலை வகித்தார். பிறகு மிச்செல் லீ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த 5-5 என்று ஆனது. ஆனால், சிந்து விடாமல் அதிரடி ஆட்டங்களை ஆடி முன்னிலை பெற்று, கடைசியில் 21-15 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த சிந்து கடைசியில் 21-13 என்று 2வது செட்டையும் கைப்பற்றி தங்கம் வென்றார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு: 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியதுடன் வழக்கை 2 வாரத்தில் முடிக்கவும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பின்னர் வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரை செய்தார்.
இதன்படி புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு இந்த தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது. அப்போது மூத்த வழக்கறிஞர் வர இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று 10-ந்தேதி (நாளை மறுநாள்) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்தில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறியியல் கலந்தாய்வு 25ஆம் தேதி தொடங்கும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் அக்.21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு மற்றும் மாணவர்களின் நன்மையை கருதி பொறியியல் கலந்தாய்வை நீட்டித்திருக்கிறோம். பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும் பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும்” என்று கூறினார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அதிசயம்: தங்கம் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் கடந்த செப்டம்பரில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 8 மாத காலமாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அகழாய்வில் முதல் முறையாக தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொல்லியல்துறை அதிகாரிகள், ‘ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன 3 செ.மீ அளவிலான பட்டயம் கண்டெடுக்கப்பட்டது. வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவை வடிவத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 18 இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல்: 51 பேர் பலி
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவுக்கும் இடையே பலகாலமாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான்தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் காசா நகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்த தாக்குதலில், ‘பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல் ஜபாரி உள்பட இதுவரை 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். இதில் குழந்தைகள் உட்பட காசா பகுதி பொதுமக்கள் 27 பேர் பலியாகியிருக்கலாம்” என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. “200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் அடங்குவர்’ என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.