செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான தமிழ்நாடு அரசு விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக குற்றஞ்சாட்டி வந்தது. இது தொடர்பாக புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பாரதப் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்திடும் வகையில் தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர். இதனைத் தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மை பூசி அழித்தனர்.
தமிழ்நாடு அரசின் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020 முதல் இந்த ஆண்டு மே 30-ம் தேதி வரை 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இருந்தன. இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது காலதாமதமாகிக்கொண்டு வந்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலினும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், 21இல் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி சட்ட மசோதா, சம்பளம் வழங்குதல் திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் 4-வது திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் 3-வது திருத்த மசோதா, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திருத்த மசோதா, தடுப்புச் சட்டத்தில் திருத்த மசோதா ஆகிய 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்
அதிமுகவின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் சார்பில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே அதிமுகவினர் மீது வழக்குகளை போடுவதாகவும் சாடினார்.
எடப்பாடி பழனிசாமி பேசி முடித்ததை அடுத்து அதிமுக நிர்வாகிகள் முழக்கமிட தயாராகினர். அப்போது ஈபிஎஸ் லேசாக மயக்கமடைந்தார். அருகில் இருந்த அதிமுக நிர்வாகிகள், தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசுப்படுத்தி அமர வைத்தனர். சிறிது நேரம் அமர்ந்த பிறகு மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினார் அதன்பின்னர் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
தமிழக போலீசுக்கு புதிய சீருடை சின்னம்
தமிழக போலீஸாருக்கு புதிய சீருடை சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய சின்னத்தை காவலர் முதல் டி.ஜி.பி. வரை அனைவரும் அணிந்து கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய போலீஸ் சீருடை சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசிய கொடி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அதனுடன் காவல் என்ற வார்த்தைகள் தமிழில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீசார், ரெயில்வே போலீசார், மகளிர் போலீசார், போக்குவரத்து போலீசார் என சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் காவலர்கள் விரைவில் தங்களது சீருடையில் புதிய சின்னத்தை வைத்து தைத்து பயன்படுத்திக் கொள்ள உள்ளனர். இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த வீரர் சஞ்சய் (எ) விமல்ராஜின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (வயது 21) என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.