தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
முன்னதாக நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் (Common Service Centres) மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், https://tamilnilam.tn.gov.in /citizen/ இணையம் மூலம் தற்போது எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ்: ஜேபி நட்டா கூறுவது அபத்தத்தின் உச்சம் – சு. வெங்கடேசன் எம்.பி. சாடல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டனர்.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாக்கூரும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம். உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம்” என கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: விரைவில் மனுதாக்கல் செய்வேன் – அசோக் கெலாட்
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17- ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சோனியா, ராகுல் சார்பில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நிறுத்தப்படுகிறார்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசோக் கெலாட், “காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல்காந்தியை நாங்கள் பல தடவை வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தனது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரும் தலைவர் பதவிக்கு வரக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். விரைவில் நான் மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். மனு தாக்கல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றாலும் ராஜஸ்தான் அரசியலுடன் தொடர்ந்து பயணிக்கவே நான் விரும்புகிறேன். இதுபற்றி காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீச்சு
கோவை மாநகரின் சித்தாபுதூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை நோக்கியும் ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை மீதும் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இரண்டு இடங்களிலும் அவை வெடிக்காததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும், சம்பவத்தின் தன்மையை கருத்தில்கொண்டு இரு இடங்களிலும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசப்பட்ட பகுதிகளுக்கு அருகே சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவான காட்சிகளை வைத்து, இந்த செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிக்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. என்னை டெம்பரரி தலைவர் என்கிறார் ஸ்டாலின். கருணாநிதி இருக்கும்போது ஸ்டாலின்தான் டெம்பரரி தலைவராக இருந்தார். எங்களை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது.
அதிமுகவில் அனைத்து தொண்டர்களுமே பொதுச் செயலாளர்தான். தொண்டர்களின் எண்ணத்தை அதிமுக எதிரொலிக்கிறது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி என்னை தேர்ந்தெடுத்தனர். இதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. எந்த காலத்திலும் அதிமுகவை உடைக்க முடியாது. சில கறுப்பு ஆடுகள் திமுகவிற்கு துணை போகிறார்கள். அவர்கள் முயற்சி பலிக்காது” என்று பேசினார்.
ஆறு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்: 7ஆவது திருமண முயற்சியில் சிக்கினார்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த வெங்கரை கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (வயது 26) என்பவருக்கும் கடந்த 7-ஆம் தேதி கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக பெண்ணின் அக்காள், மாமா எனக்கூறி இருவரும், மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் பாலமுருகன் (45) ஆகிய மூவர் மட்டுமே வந்திருந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு பெண் புரோக்கர் பாலமுருகன் திருமண கமிஷன் தொகையாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், புது மாப்பிள்ளை தனபால் கடந்த 9ஆம் தேதி காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை. பீரோவை திறந்து பார்த்தபோது கல்யாண பட்டு புடவை, கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சந்தியா, பாலமுருகன் உட்பட அனைவரது தொலைபேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சிடைந்த தனபால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்ய மணமகளை தேடியுள்ளனர். அப்போது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் புகைப்படம் வந்துள்ளது. இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமி (45) மூலம் பேசி திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்துள்ளனர். திருமணத்துக்காக சந்தியா, தனலட்சுமி உறவினர் ஐயப்பன் என்று ஒருவர் என மூவர் காரில் வந்துள்ளனர். அப்போது தனபாலும் அவரது உறவினர்களும் சந்தியா உட்பட மூவரையும் பிடித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியாவுக்கு இதுவரை ஆறு திருமணம் நடந்துள்ளதும், ஏழாவதாக திருமணம் செய்ய முயன்றபோது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கி பழகிவிட்டு கணவன் இரவில் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் போது உடைமைகளை எடுத்துக்கொண்டு தலை மறைவாகி விடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.