தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மக்களிடம் முக்கியச் செய்திகளை விரைவாகச் சேர்க்கும் விதத்தில் இன்னும் சில ஊர்களில் ‘தண்டோரா’ போடும் பழக்கம் இருப்பதையும், அதைச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதையும் கண்டேன். அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது. இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலிப்பெருக்கியை வாகனங்களில் பொருத்தி வலம்வரச் செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்.
எனவே, ‘தண்டோரா’ போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறி ஈடுபடுத்துகிறவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இச்செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
ஆவின் தண்ணீர் பாட்டில் – அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் பேசும்போது, “தமிழகத்தில் 28 இடங்களில் ஆவின் பால் தயாரிக்கும் யூனிட் உள்ளது. அங்கு வாட்டர் பிளாண்ட் இருப்பதால் குடிநீர் பாட்டில் தயாரிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தற்போது வாட்டர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் அளவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம். ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது 28 லட்சமாக உயர்ந்துள்ளது” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் கனமழை: அவசரக் கட்டுப்பாட்டு மையம் எண்கள் அறிவிப்பு
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் இன்று விளக்கினார். அப்போது, “தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 2.8.2022 முடிய தமிழ்நாட்டில் 242.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 94 விழுக்காடு கூடுதல் ஆகும்.
இன்றும் நாளையும் நாளை மறுதினமும் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல்வரின் உத்தரவின் பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்’’ என்று கூறினார்.
சென்னையில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை
சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த காவலரின் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அதுபோல் வரும் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுநலன் மற்றும் இயக்கத்தின் நலன் கருதி பகுஜன் சமாஜ் கட்சி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தங்கரை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.