தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி புதிய விதிகள் 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில், 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் அவர்கள் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளில் கடந்த 22-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசு விதிகள் செல்லும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழ்நாடு அரசு முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுக்கள் நிலுவையில் உள்ளதால், உங்கள் மனுவையும் அதனுடன் சேர்த்து விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தற்போது இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும், இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டு திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ மாணவியர்களின் தனித் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார். ஆண்டுக்கு, 10 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களைப் படிப்பில், சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். திறன் மேம்பாட்டு, வழிகாட்டி ஆகிய இரண்டு கூறுகளை இத்திட்டம் கொண்டுள்ளது.
இதனடிப்படையில், 12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்று வழிகாட்டும் naanmudhalvan.tnschools.gov.in என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், துறைசார் நிபுணர்கள், வழிகாட்டிகள் மூலம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கென இணைய வழி அமர்வுகள் பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
குஜராத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்த முயற்சி: பிரதமர் மோடி பேச்சு
குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், “இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் குஜராத் மாநிலத்தின் பெருமைக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடைபெற்றது. மேலும், இந்த மாநிலத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்தவும் பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அதையெல்லாம் கடந்து குஜராத் மாநிலம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது பல குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால், 2047-ல் வளர்ந்த நாடாக மாறும் என்பது எனது தெளிவான பார்வை” என்று பேசினார்.
லிவ் இன், தன்பாலின உறவாளர்கள் நடத்துவதும் குடும்ப அமைப்புதான்: உச்ச நீதிமன்றம் கருத்து
இந்தியாவில் தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்று கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்பாலின உறவாளர்களின் திருமணம், லிவ் இன் உறவுகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எஸ்.போப்பண்ணா அடங்கிய அமர்வு இன்று, “குடும்ப உறவு என்பது திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் இணையர்கள், தன்பாலின உறவாளர்கள் நடத்தும் குடும்பத்தையும் உள்ளடக்கியதே” என்று தெரிவித்துள்ளது.
வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டது தொடர்பாக அந்த பெண் தொடர்ந்த வழக்கில் இந்தக் கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெண்களை அவதூறாக பேசிய அமெரிக்க பெண் கைது
அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த மெக்சிகன் – அமெரிக்க எஸ்மரால்டா அப்டன் என்ற பெண் வாகன் நிறுத்துமிடம் ஒன்றில் இந்திய வம்சாவளி பெண்களை பார்த்து அவதூறாக பேசி உள்ளார். இந்திய பெண்களிடம் நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியர்களை நான் வெறுக்கிறேன் என்று கூறினார். இது குறித்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகியது இதை தொடர்ந்து போலீசார் அந்த அமெரிக்க பெண்ணை கைது செய்துள்ளனர். “இந்த சம்பவம் டெக்சாஸ் சட்டங்களின்படி ஒரு வெறுப்பு குற்றமாகும்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.