அதிமுக அலுவலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று பிற்பகல் தொடங்கியது. விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
ஞானவாபி வழக்கு – வாரணாசி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்தக் கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மத வழிபாட்டுத் தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில், இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுள்களின் சிலைகளை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிவில் கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தல வழக்கை வாரணாசி சிவில் கோர்ட்டில் இருந்து அனுபவம் பெற்ற நீதிபதி உள்ள வாரணாசி மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தல வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், ஞானவாபி மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்த கோரிய இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்த மனுவின் மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியார் சிலை விவகாரம் – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் பெரியார் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள, ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை நீக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த பேராசிரியர் எம். தெய்வநாயகம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்கு தமிழக அரசும் உதவி புரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, பெரியார் சிலைகளில் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னையில் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்
சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்றுமுதல் நடைபெறவுள்ளது. இதில் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகள் பலரும் பங்கேற்க உள்ளனர். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒற்றையர் பிரிவில் 22பேர் நேரடியாகவும், 4 பேர் வைல்டு கார்டு நுழைவு மூலமாகவும், 6 பேர்தகுதிச் சுற்று மூலமாகவும் பங்கேற்கவுள்ளனர்.
முன்னணி வீராங்கனைகளான அலிசன் ரிஸ்கி அம்ரித்ராஜ் (அமெரிக்கா), வர்வரா கிராசெவா (ரஷ்யா), மக்தா லினட் (போலந்து), ரெபேக்கா பீட்டர்சன் (ஸ்வீடன்), தத்ஜனா மரியா (ஜெர்மனி), கியிங் வாங் (சீனா), சிலோயிபாக்கெட் (பிரான்ஸ்), ரெபேக்கா மரினோ(கனடா), மோயுகா உச்சுய்மா (ஜப்பான்), ஒக்சானா செலக்மெட்டேவா (ரஷ்யா) உள்ளிட்டோர் இதில் விளையாட உள்ளனர்.
நீட் தேர்வில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகக் குறைவாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீத பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் நிறைய பேருக்கு நெகட்டிவ் மார்க்கிங் முறை இருந்ததுகூட தெரியவில்லை என்ற தகவல்களும் வெளியாகி அரசு பயிற்சி மையங்கள் தரத்தின் மீது கேள்விகளை எழுப்பியது கவனிக்கத்தக்கது.