அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் – ஈபிஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் இன்று வழங்கிய தீர்ப்பில், ‘அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி, தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அதிமுக தலைமை அலுலகத்தில் தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்கக் கூடாது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ஒரு சீட்டுக்கு ரூ. 20 லட்சம்: சிபிஐ விசாரணை
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடந்தது. இதில், டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் தேர்வர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுதுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஆள்மாறாட்டம் செய்த 8 பேர் கைதாகினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ஒரு மாணவருக்கு பதிலாக ஆள்மாற்றட்டம் செய்து தேர்வு எழுத ரூ. 20 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையில் ரூ. 5 லட்சம் நீட் தேர்வை மாணவருக்கு பதிலாக எழுதுபவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை இடைத்தரகர்கள் மற்றும் பிறரால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் தொடங்கிய போராட்டம்: உச்சகட்ட பதற்றம்
இலங்கை அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று (20-07-2022) நடைபெற்றது. இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர். இதில் ரணில் 134 வாக்குகளும் டல்லஸ் 82 வாக்குகளும் அனுராகுமார 3 வாக்குகளும் பெற்றனர். 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. இலங்கை அதிபர் செயலகம் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். ரணில் பதவி விலக கோரி அதிபர் செயலகத்திற்கு முன்பு அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள்: தமிழக பள்ளிக்கல்வித் துறை தகவல்
நாடு முழுவதும் கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், “நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும். அதன்படி நடப்பாண்டுக்கான தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 162 கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்தும், 38 கேள்விகள் மற்ற பாடத்திட்டங்களில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. அதாவது, வேதியியல் பாடத்தில் 40, இயற்பியலில் 48, உயிரியலில் 74 கேள்விகள் தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்றுள்ளன. எனவே, நமது பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு பாடநூல்களை நன்றாகப் படித்தவர்கள் நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொண்டிருக்க முடியும்” என்று கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம்
இங்கிலாந்தில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் வெப்ப நிலையால் இங்கிலாந்தில் 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்துகிறது. இத்தகைய வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
முதல் ரெட் அலெர்ட் நிலையில் உள்ள லண்டன் நகரில், பெரும்பாலான ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் உணவும், பார்பிக்யூ போன்ற உணவுகளை வெளியே சமைப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.