ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் மூன்று கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில், ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட மூன்று கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எல்லோருக்கும் உளங்கனிந்த நன்றி – இளையராஜா
இளையராஜாவின் கலைச் சேவையை பாராட்டும் வகையில், மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இளையராஜா ட்விட்டரில், ”என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு: ரூ. 25 ஆயிரம் அபராதத்துடன் தள்ளுபடி
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான பி.ஏ. ஜோசப் இந்த இந்த வழக்கை தொடர்ந்தார். “அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 28-ந்தேதி மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “பத்திரிகை செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்து உள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ. 25 ஆயிரம் வழக்குச் செலவு (அபராதம்) விதிக்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பெண் ஊழியருடன் ரகசிய உறவு: 9-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் (வயது 51), தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் (வயது 36) என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்ததும், அதனால் ஷிவோன் சிலிஸ் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த இரட்டை குழந்தைகள் கடந்த நவம்பர் மாதம் பிறந்துள்ளன. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில்,எலான் மஸ்க்கும் சிலிஸும் தங்களின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த ஆவணங்கள் மூலம்தான் இந்த செய்தி உறுதியாகியுள்ளது.
ஷிவோன் சிலிஸ் 2017ஆம் ஆண்டு மே மாதம் எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் திட்ட இயக்குனராக பணியாற்றிய ஷிவோன் சிலிஸ், 2019ஆண் ஆண்டில் நியூராலிங்கில் சேர்ந்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்துடன் எலான் மஸ்க்கின் ஒப்பந்தம் நிறைவடைந்த பின், ட்விட்டர் நிறுவனத்தை ஷிவோன் முன்னின்று நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. எலாஸ் மஸ்க்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவின் பாடகர் கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் பதவி விலகினர். முன்னாள் துணை தலைமை கொறடா கிறிஸ் பிஞ்சருக்கு எதிரான பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம் குறித்த செய்திகள் வெளியானதிலிருந்து அவர் மீதான சர்ச்சைகள் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.
இந்நிலையில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.