இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் விடுதலை குறித்து ஏன் முடிவெடுக்கவில்லை என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் குறித்து மத்திய அரசு வாதங்களை முன்வைத்தது. தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார். அதனை குடியரசுத் தலைவர் நிராகரிப்பது, ஒப்புதல் அள்ளிப்பது, அல்லது ஆளுநர் முடிவுக்கே விடுவது என மூன்று விஷயங்கள் உள்ளன என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பேரறிவாளன் மற்றும் தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிப்பதற்கான உத்தரவை வெளியிட்டு விடுவோம் என தெரிவித்தனர்.
மேலும், “இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம். பேரறிவாளன் விடுதலை குறித்து அமைச்சரவை முடிவெடுத்தபின் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சி தத்துவத்திற்கு என்ன அர்த்தம்? அனைவரும் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும். அமைச்சரவை முடிவுக்கு முரணாக ஆளுநர் ஏன் முடிவெடுக்க வேண்டும்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருவண்ணாமலை காவல்நிலைய மரணம்: தக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர் உறுதி
திருவண்ணாமலையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தங்கமணி என்பவர் காவல்நிலையத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் தங்கமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக கூறினார். கைது செய்யப்பட்ட தங்கமணி முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் ஏற்பட்ட வலிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் விசாரணை அறிக்கையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை: மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக ரத்னவேல் மீண்டும் நியமனம்
மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டசபை கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார்” என்று தெரிவித்தார்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: அவசியமில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என அமைச்சர் வேண்டுகோள்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், சென்னை அபிராமபுரத்தில் ‘கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு’ விழிப்புணர்வு கண்காட்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள, காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விவகாரம்: முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் – அமைச்சர் சேகர்பாபு
தருமபுரம் ஆதீனம் பட்டிணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, தமிழக சட்ட சபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு விளக்கம் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு 22-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை பற்றி தருமபுரம் ஆதினத்துடன் முதல்வர் பேசி நல்ல முடிவெடுப்பார்” என கூறினார்.