தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 3,262 மையங்களில் 8.69 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்த தேர்வை 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக 1,000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டன. முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் சாதாரணமாக அமர்ந்து தேர்வு எழுதினர்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதல்கட்டமாக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான மொத்த திட்ட மதிப்பான 1,977கோடி ரூபாயில், தற்போது 1,500 கோடி ரூபாயை ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார். மீதமுள்ள நிதி, அக்டோபர் 26-ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசு ரூ. 8 கோடி ஒதுக்கீடு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.8 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கம் மற்றும் நிறைவு விழாவை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.92.13 கோடி ஒதுக்கிய நிலையில், விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெய்பீம்’ பட விவகாரம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்ட வழக்கில் படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா – ஜோதிகா, இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20-ல் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து பேசினார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் இந்தியா – பிரான்ஸ் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பொருளாதார நிலைமை குறித்தும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர்கள் விரிவாக விவாதித்தனர். மேலும் இருதரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.