சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதியான 12 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் இல்லை எனவும், 9 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதனையடுத்து ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி எனது காரை எடுக்கலாம் – சட்டசபையில் உதயநிதி பேச்சு
“சட்டசபையில் இருந்து செல்லும்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எனது காரை எடுத்து செல்லலாம் ஆனால் கமலாலயம் சென்றுவிட வேண்டாம்’ என திமுக எம்.எல்.ஏ உதயநிதி நகைச்சுவையாக தெரிவித்தார்.
சட்டசபை கூட்டத் தொடரின்போது கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏறச் சென்றார். பின்னர் மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்டியதும் தன் காருக்கு சென்றார். இந்நிலையில் இன்று சட்டசபையில் இதுபற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், “ கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது பேசுகையில் அவையில் இருப்பதற்கு நன்றி. அப்படி வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில்தான் தவறுதலாக ஏறுகிறீர்கள். அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்து செல்லலாம். ஆனால் சென்றுவிட வேண்டாம்” என்றார்.
மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியது
உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இதற்காக ராணுவ வீரர்களை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டின் மரியுபோல் நகரை முற்றுகையிட்டு பல நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் மரியுபோல் நகரை தங்கள் படைகள் கைப்பற்றி உள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷிய ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வடசென்னையில் குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் – முதல்வர் அறிவிப்பு
வடசென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசும்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார். தமிழக விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியைத் தொடங்கவிருக்கிறோம். “ஒலிம்பிக் தங்கம் தேடுதல்” என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.