தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 36 ஆயிரத்து 945 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
முன்னதாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக கால தாமதமானதால், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதியை ஜூலை 27-ம் வரை தமிழக அரசு நீட்டித்திருந்தது. ரேண்டம் எண் வெளியீடு , சான்றிதழ் சரிபார்ப்புகான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. ஆன்லைன் கவுன்சிலிங் ஆகஸ்ட் 22-ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது – பிரதமர் மகிழ்ச்சி
சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது என்று பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘செஸ்’ ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். இன்று காலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில், “சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது” என்று பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்னை சுற்றுப்பயண வீடியோவையும் பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஸ்மிரிதி இரானி சந்திப்பு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் சந்தித்து பேசினர்.
திரவுபதி முர்மு குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முடங்கின. இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி – பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது.
இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்