மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18-ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பினர். இதனையடுத்து சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக மாநிலங்களவையில் இருந்து கனிமொழி, என்.வி.என். சோமு, சண்முகம், என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா உள்பட 11 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அமலாக்கத்துறையில் சோனியா காந்தி ஆஜர்
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி கடந்த 21-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சோனியாகாந்தி 25-ம் தேதி (நேற்று) மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் அவர் ஆஜராவது ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சோனியா காந்தி 2-வது முறையாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆஜரானார். அவருடன் மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் வந்தனர்.
சோனியாகாந்தி மட்டும் அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் சென்றார். சிறிது நேரத்தில் ராகுல்காந்தி புறப்பட்டு சென்ற நிலையில் பிரியங்கா காந்தி அங்கேயே காத்திருந்தார். சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
சோனியாகாந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டதை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழப்பு
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தில் அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் சாராயம் குடித்த பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்ததுச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது
முதலமைச்சர் அழைப்பு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் பொதுமக்களின் புகார் குறித்து கேட்டறிந்தார்.
நாவலூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்த பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அழைப்பு மையத்தில், முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஈரோட்டிலிருந்து அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டவரிடம், அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். அழைப்பு மையத்திற்கு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது – அமைச்சர் செந்தில்பாலாஜி
ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படாது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் மாதிரி ஜோதியை கொண்டு செல்லும் விழிப்புணர்வு பேரணி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை 26) காலை தொடங்கியது.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மாதிரி ஜோதி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2 நாட்களாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி அதற்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் உலவி வருகிறது. நிச்சயமாக ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படாது.
தமிழகத்தில் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இதில் 1 கோடி பேருக்கு எந்தவித கட்டண மாற்றமோ, எந்தவித கட்டண ஏற்றமோ, எவ்வித கட்டணமோ இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகர்வோர்களுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.27.50 என இரு மாதங்களுக்கு ரூ.55 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ரூ.1 என்பதை விட குறைவு” என்றார்.
கார்கில் வெற்றி தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்
கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையிலும் உயிரோடு இருக்கும் கார்கில் போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 23-வது ஆண்டாக கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.