சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் இன்று நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுபெறக்கூடும். பிறகு வடதிசையில் நகர்ந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். பிறகு 25ஆம் தேதிவாக்கில் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதனால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று முதல் 25ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மற்றும் கனமான மழை பெய்யக்கூடும். வங்காள கடலோரப் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு – தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரின் எண்ணிக்கை குறைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 20 அடிக்கு ஒரு காவலர் என்ற வகையில், பாதுகாப்பிற்காக போக்குவரத்தை சீர் செய்ய நிற்பது வழக்கம். காவலர்களுடன், போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபடுவார்கள். முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து இல்லம் நோக்கி புறப்படும் போதும், அவர் செல்லும் பாதையில் சில மணி துளிகள் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, எளிதில் கான்வாய் வாகனம் செல்ல வழிவகை செய்யப்படுவது வழக்கம். இதற்காக ஆழ்வார்பேட்டையில் இருந்து தலைமை செயலகம் வரை 60 சந்திப்புகளில் காவலர்கள் நிற்பார்கள். இந்நிலையில், இதனை குறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியதின் பேரில் அது தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு கழிவுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம் – மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் வெடித்த பட்டாசு கழிவுகள், சரியாக வெடிக்காத நிலையில் உள்ள பட்டாசுகள், மத்தாப்பு கம்பிகள் என பட்டாசு குப்பைகள் வீதிகள் தோறும் பெருமளவில் சேர்வது வழக்கம். அவற்றை தனியாக சேர்த்து முறைப்படி அப்புறப்படுத்துவதில் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் பங்களிப்பும் அவசியமாகிறது.
இந்நிலையில், பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எரிந்த நிலையிலும் எரியாத நிலையிலும் உள்ள பட்டாசுகள், பட்டாசு குப்பைகள் மற்றும் எஞ்சிய பட்டாசுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம். இத்தகைய பட்டாசு கழிவுகளை நாள்தோறும் குப்பைகளைப் பெற வரும் தூய்மைப் பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இம்ரான் கான் தகுதி நீக்கம்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடமிருந்து பெறப்பட்ட அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை பொதுபதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இம்ரான் கானுக்கு பொது பதவி வகிக்க 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.