பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் ஒரு கோஷ்டியால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக 8 பேர் சரணடைந்த நிலையில், அவர்களில் ஒருவரை போலீஸார் என்கவுண்டர் செய்தனர். இந்த கொலை வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32), அவரது தந்தையான சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி நேற்று முன்தினம் (ஆக.18) கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அவருடன் கைகோத்து கொலை திட்டம் அரங்கேற துணையாக நின்றவர்கள் யார் என்ற பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து துப்பு துலக்கி வருகின்றனர். இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்திலையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அவர் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு இருவரும் செல்போனில் பேசி இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மொட்டை கிருஷ்ணனின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்ததில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம், முட்டை கிருஷ்ணன் அடிக்கடி பேசியது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து, மோனிஷாவிற்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் மோனிஷா போலீசாரிடம் சில தகவல்களை கூறியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தான் ஒரு வழக்கறிஞர் என்றும், வழக்கு குறித்து மட்டுமே செல்போனில் மொட்டை கிருஷ்ணன் பேசியதாகவும் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
மொட்டை கிருஷ்ணன் குறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக தெரிய வந்திருக்கிறது. வெளிநாடு செல்வதற்கு முன் மொட்டை கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி நெல்சனின் வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. எனவே மொட்டை கிருஷ்ணனுக்கும் நெல்சனுக்கும் என்ன தொடர்பு? எதற்காக அடைக்கலம் கொடுத்தார் என இயக்குனர் நெல்சனிடம் விரைவில் போலீசார் விசாரணை நடத்த இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.