தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே ஜாக்கிசான் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. ஒரு கால கட்டத்தில் அவர் படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட, அவரின் ரசிகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக கூடியது. இப்போது ஜாக்கிசான் நடித்த ‘தி லெஜண்ட்/மித்2’ என்ற ஆங்கில படம், தமிழில் ‘விஜயபுரி வீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது
கதைப்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜாக்கிசானுக்கு அவ்வப்போது ஒரு கனவு வருகிறது. அதில் அவர் போர் வீரனாக வருகிறார். தனது தாய்நாட்டுக்காக போராடுகிறார். அவரின் நண்பர், காதலி, பொக்கிஷம், போர் என்று கதை விரிகிறது. நிகழ்காலத்தில், கனவில் வருபவர்கள் வருகிறார்கள். வெவ்வேறு தொழில் செய்யபவர்களாக வருகிறார்கள். அந்த கதைக்கும், இப்போதைய கால கட்டத்துக்கும் என்ன தொடர்பு. ஒரு ரகசிய இடத்தில் இருக்கும் தங்கப்புதையலை யார் கண்டுபிடித்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.
நிகழ்காலம், அரசர் காலம் என 2 கட்டங்களாக, மாறி, மாறி திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் டப்பிங் என்பதால் நாட்டின் பெயர் கபாடபுரம், ஜாக்கிசான் பெயர் வீராங்கன், ஹீரோயின் பெயர் பூங்குழலி, இன்னொரு கேரக்டர் பெயர் சுந்தரா என அழகாக தமிழ் படுத்தப்பட்டுள்ளன. ஜாக்கிசானின் முந்தைய படங்கள் மாதிரி காமெடி வசனங்கள் இல்லாமல், இந்த பட வசனங்கள் பாகுபலியை நினைவுப்படுத்துகின்றன.
போர்கள காட்சிகள், நட்பு, ஒரு பனி மலையில் நடக்கும் கிளைமாக்ஸ் ஆகியவை விஜயபுரி வீரனை ரசிக்க வைக்கின்றன. பல காட்சிகள் எம்ஜிஆர் படங்களை பார்ப்பது போல இருக்கிறது. தமிழில் விஸ்வாஸ் சுந்தர் இந்த படத்தை வெளியிடுகிறார்.
இந்த படம் உருவானது குறித்து விரிவாக பேட்டி கொடுத்துள்ளார் ஜாக்கிசான். இந்த படத்தை இயக்கிய ஸ்டான்லி டாங் ஜாக்கி சானுடன் இணைந்து பல முறை பணியாற்றியவர். ‘போலீஸ் ஸ்டோரி III: சூப்பர் காப்’ படத்தை இயக்கியவர். தவிர, ‘ரம்பிள் இன் தி பிராங்க்ஸ்,’ ‘போலீஸ் ஸ்டோரி 4: ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்,’ ‘தி மித்,’ ‘குங் ஃபூ யோகா, போன்ற அதிரடி படங்களை இயக்கியவர். விஜயபுரி வீரன் படத்தில் இளம் வயது ஜாக்கிசான் தோற்றம் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.