கோவிட்டின் பாதிப்பிற்கு பிறகு தரமான படங்களை கொடுப்பதில் தட்டு தடுமாறி வந்த பாலிவுட்டுக்கு, ஒரேயொரு நல்ல செய்தியைச் சொல்லி இருக்கிறது உலகப் புகழ்பெற்ற போர்ஃப்ஸ் பத்திரிக்கை. தென்னிந்திய சினிமாவை போல் கதையம்சமுள்ள தரமான படங்களை கொடுக்கவில்லை என்றாலும், பாலிவுட் நடிகைகள் சம்பளம் வாங்குவதில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கிறார்கள் என்ற தகவலை சொல்லி இருக்கிறது.
போர்ஃப்ஸ் பத்திரிகை, திரைப்படம் தொடர்பான தகவல்களுக்காக உலக புகழ் பெற்ற இணையதளமான ஐ.எம்.டி.பி உடன் இணைந்து, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
திபீகா படுகோன்
விரைவில் அம்மா ஆகப்போகும் உற்சாகத்தில் இருக்கும் தீபிகா படுகோன், இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கான டாப் 10 பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். ரன்வீர் சிங்குடன் இவருக்கு திருமணம் ஆன பிறகும் கூட, தீபிகாவின் மார்க்கெட் கொஞ்சம் கூட சரியவில்லை. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 15 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2007-ல் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆகிய தீபிகா படுகோன், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கான பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் ஏதாவது ஒரு இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ’பத்மாவத்’ படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் 13 கோடி. இந்த படத்தில் தீபிகாவுடன் நடித்த முன்னணி நடிகருக்கு சம்பளம் 10 கோடி என்கிறார்கள்.
கங்கனா ரனவத்
சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதிலும், பாலிவுட் நட்சத்திரங்களைச் சீண்டிப் பார்ப்பதிலும் புகழ் பெற்றவரான, சமீபத்திய ‘பளார்’ அரசியல்வாதி கங்கனா ரனவத், இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.
அடுத்தடுத்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் கூட, ஒரு படத்தில் நடிக்க இவர் வாங்கும் சம்பளம் 15 கோடியிலிருந்து 27 கோடி வரையாம். கங்கனா ரனவத் தனது சொந்த மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் இவர் தொடர்ந்து நடிப்பாரா இல்லை அரசியலில் கவனம் செலுத்துவாரா என்பது இனி தான் தெரியும். இதைப் பொறுத்தே அடுத்த வருட போர்ஃப்ஸ் பத்திரிகை பட்டியலில் இடம் கிடைக்கும்.
ப்ரியங்கா சோப்ரா
பாலிவுட் மாபியா கொடுத்த பஞ்சாயத்துகளால் பதறிப்போன ப்ரியங்கா சோப்ரா ஆங்கில வெப் சீரிஸில் நடிக்க அமெரிக்காவுக்குப் பறந்தார். இதனால் இங்கு அவருக்கு மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபகாலமாக அதிரடியையும் கவர்ச்சியையும் கலந்து நடிக்கும் ப்ரியங்கா சோப்ரா 10 15 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். இணைய தொடர்களில் இவர் காட்டும் கவர்ச்சிக்கு, ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் மார்க்கெட்டில் இவர் இன்னும் தாக்கு பிடிக்கிறார்
காத்ரீனா கைஃப்
பாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யூனிவர்ஸ் படமான டைகர் பட வரிசையின் கதாநாயகி. கவர்ச்சியுடன் ஆக்ஷனையும் கலந்திருக்கும் இவருக்கு மார்க்கெட் ஏறும்.. இறங்கும்.. சில நேரங்களில் எகிறும். இதனால் இவர் ஒரு படத்திற்கு 15 முதல் 25 கோடி ரூபாய் சம்பளம் வரை கேட்கிறார். இதனால் காத்ரீனா கைஃப் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
ஆலியா பட்
பாலிவுட்டில் நடிக்க வந்த போது ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர் ஆலியா பட். ஆனால் இன்று இந்திய சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகை ஆக முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நடிப்பில் புது பரிமாணம் காட்டி வரும் ஆலியா பட், வெறும் நடிப்பை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் மார்க்கெட் இழந்த பிறகு ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டிருக்கிறார். இதனால் இவர் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இவரது நடிப்பை ரசிப்பதற்கு என்றே இப்போது தனி கூட்டம் இருப்பதால் ஒரு படத்தில் நடிப்பதற்கு 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
கடந்த ஆண்டு தீபிகா படுகோனுக்கும் இவருக்கும் தான் போட்டியிருந்தது ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ள இவர் எடுத்துக் கொண்ட இடைவெளி, இவரை கொஞ்சம் சற்று பட்டியலில் இருந்து இறங்க வைத்திருக்கிறது அனேமாக இந்த வருடம் அவர் மீண்டும் ரவுசு காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கரீனா கபூர் கான்
பாலிவுட்டின் பாரம்பரிய மிக்க நட்சத்திர குடும்பத்திலிருந்து வந்தவர் கரீனா கபூர். இவர் இளமையோடு கதாநாயகியாக நடித்த காலத்தை விட, திருமணமான பிறகு தொடங்கியிருக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் தான் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேடி நடிப்பதால் இவருக்கு படங்கள் தொடர்ந்து வர ஆரம்பித்திருக்கின்றன. இவர் ஒரு படத்தில் நடிக்க 8 கோடி முதல் 18 கோடி வரை சம்பளம் கேட்கிறார். ரீ எண்ட்ரியில் கலக்கும் கரீனாவுக்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை பட்டியலில் ஆறாவது இடம் கிடைத்திருக்கிறது.
ஷ்ரத்தா கபூர்
2013-ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஆஷிக்கி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷரத்தா கபூர். அதிகம் கவர்ச்சி காட்டாமல் நடித்துக் கொண்டிருந்த இவரும், போட்டியை சமாளிக்க கவ
ர்ச்சியில் இறங்கினார். இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்களை தேடி நடிக்கும் ஏழு முதல் ஐந்து கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இதனால் இந்த பட்டியலில் இவருக்கு ஏழாவது இடம்.
வித்யா பாலன்
விளம்பரம் மாடலாக தனது கலை வாழ்க்கையை தொடங்கியவர் வித்யா பாலன். தமிழில் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரித்த ’மனசெல்லாம்’ பணத்திற்கு கதாநாயகியாக முதலில் தேர்வானவர் வித்யா பாலன்தான் என்றாலும் பிறகு சில காரணங்களால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனால் தமிழ் சினிமாவே வேண்டாமென கோபித்துக் கொண்டு பாலிவுட்டுக்கு கிளம்பிய வித்யா பாலன், இன்று பாலிவுட்டில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகை முக்கியத்துவம் பெற்று இருக்கிறார். இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 8 முதல் 14 கோடி வரை சம்பளம் கேட்கிறார்.
அனுஷ்கா ஷர்மா
விளம்பர மாடலாக தனது கலையுலக வாழ்க்கை தொடங்கிய அனுஷ்கா சர்மா, பின்னாளில் நடிகையான பிறகும் கூட ஜொலிக்க முடியவில்லை. ஆனால் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு, இந்த நட்சத்திர ஜோடிக்கு வரும் விளம்பர வருவாய் மிக அதிகம். அனுஷ்கா சர்மா முன்பு போல் சினிமாவில் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றாலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 8 முதல் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதனால் இவருக்கு இந்த பட்டியலில் ஒன்பதாவது இடம் கிடைத்திருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் பச்சன்
உலக அழகி என்றாலே பட்டென்று நினைவுக்கு வரும் ஐஸ்வர்யாராய், இன்று பழைய அழகியாக மாறி இருந்தாலும், இவர் ஃப்ரேமில் வந்து நின்றால் அதற்கென்று ஒரு தனி அழகு கிடைக்கிறது. இப்பொழுது தனக்கு பொருந்துகிற கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். இவரது கால்ஷீட்டை வாங்க ஒரு படத்திற்கு பத்து கோடி கூட கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். முன்னாள் உலக அழகிக்கு இப்பொழுது பத்தாவது இடம் தான் கிடைத்திருக்கிறது.
போர்ஃப்ஸ் பத்திரிக்கை மற்றும் ஐ.எம்.டி.பி இணைந்து வெளியிட்டு இருக்கும் ’இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில்’ இடம்பெற்றுள்ள பத்து பேரில் 8 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் கங்கனா ரனவத்துக்கும் ஷ்ரத்த கபூருக்கும் மட்டுமே இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திருமணம் ஆனால் நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும் என்ற கருத்தை உடைத்து எறிந்து இருக்கிறார்கள் இந்த எட்டு நடிகைகளும்.
இந்த பட்டியலில் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. இந்த 10 பேரில் ஒருவர் கூட தென்னிந்திய சினிமாவை சேர்ந்தவர் இல்லை.
பாலிவுட்டுக்கு படை எடுத்து இருக்கும் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களில் யாராவது ஒருவராவது, அடுத்த வருடம் இந்த பட்டியலில் இடம்பெறுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.