மிஷன் இம்பாசிபிள் 1996-ல் தொடங்கிய இந்த படவரிசை ஏறக்குறைய 34 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது.
முந்தைய பாகத்தில் என்டிடி எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்திடம் இருந்து உலகை காக்கும் பொருட்டு நடுக்கடலின் ஆழத்தில் கிடக்கும் செவாஸ்டோபோல் என்னும் நீர்மூழ்கியை தேடி ஈதன் ஹன்ட் (டாம் க்ரூஸ்) செல்வதுடன் முடிந்த கதை, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இதில் தொடங்குகிறது.
நீர்மூழ்கியில் இருக்கும் சோர்ஸ் கோட்-ஐ எடுத்து என்டிடியை தடுக்காவிட்டால் அது உலக நாடுகளின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இன்னொரு புறம் அதே சோர்ஸ் கோட்-ஐ கைப்பற்றி என்டிடியை கட்டுப்படுத்த நினைகும் வில்லன் கேப்ரியல். வில்லனை தடுத்து என்டிடியின் அட்டகாசங்களை ஹீரோ கட்டுப்படுத்தி மீண்டும் ஒருமுறை உலகை காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.
மிஷன் படவரிசையின் ஒவ்வொரு படத்திலும் சில நிமிட காட்சிகளுக்கு கூட தனது உயிரை பணயம் வைத்து சாகசங்களில் ஈடுபடும் டாம் க்ரூஸுக்கு இது கடைசி மிஷன் படம். 34 ஆண்டுகளாக தொடர்ந்து உலகமெங்கும் வரவேற்பை பெற்ற மிஷன் படங்கள் இனி வராது என்பதே ஹாலிவுட் ரசிகர்களுக்கு இதயத்தை கனக்கச் செய்யும் செய்திதான்.
அதற்கு ஏற்ற வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் எமோஷனல் தருணங்கள் வைக்கப்பட்டுள்ளன. படத்தின் தொடக்கத்தில் டாம் க்ரூஸிடம் நாட்டுக்காக அவர் செய்த தியாகங்கள், மிஷன்கள் குறித்து அமெரிக்க அதிபர் பேசும் காட்சியும், அதன் பின்னணியில் முந்தைய படங்களில் காட்சித் துணுக்குகளும் நல்ல ட்ரிபியூட்.
ஒப்பீட்டளவில் ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தில் குறைவு என்றாலும் படத்தில் முக்கியமான காட்சிகளாக வரும் நீர்மூழ்கிக்கு செல்லும் காட்சியும், க்ளைமாக்ஸ் விமான சண்டையும் ஒவ்வொரு நொடியும் பிரமிக்க வைக்கிறது. வழக்கம்போல தனது உயிரை பணயம் வைத்து சாகசங்களை செய்து நம்மை சீட் நுனியிலேயே வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ்.
படத்தில் பிரச்சினைகளும் ஏராளமாக இருக்கின்றன. முந்தைய பாகத்தில் என்டிடி மிக எளிமையாக புரியவைத்த நிலையில், இந்த பாகத்தில் வேண்டுமென்றே அது குறித்து மிக சிக்கலான விளக்கங்களை சொல்வது ஏன்? என்டிடியின் தீய நோக்கங்களை ஆடியன்ஸுக்கு புரிய வைக்க திரும்ப திரும்ப வைக்கப்பட்ட காட்சிகள் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. கிட்டத்தட்ட பாதிப் படம் வரையுமே என்டிடி, கேப்ரியலின் நோக்கம் என்னவென்பது தெளியாக கடத்தப்படவில்லை. கூடவே நீள நீளமான வசனங்களும் நெளிய வைக்கின்றன.
முகத்தில் வயதின் தோற்றம் தெரிந்தாலும், தன்னுடைய அசகாய சாகசங்களால் காட்சிக்கு காட்சி வியக்க வைக்கிறார் டாம் க்ரூஸ். அவர் ஓடத் தொடங்கினாலே ஆடியன்ஸுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. தன்னுடைய அபாரமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் மூலம் கடைசியாக ஒருமுறை தன்னுடைய ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவுகிறார்.
முந்தைய பாகங்களுக்கும் இந்தப் படத்துக்கு போட்ட முடிச்சுகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், என்டிடி-க்கு சொல்லப்படும் முன்கதை கம்பி கட்டும் கதையாகவே தோன்றியது. ஆனால், முதல் பாகத்தில் இருந்த ஒரு சிறிய கதாபாத்திரத்தை இதில் கொண்டு வந்தது புத்திசாலித்தனமான ஐடியா.
என்டிடி பற்றிய குழப்பத்தை தவிர்த்து அதிரடிகளை அதிகரித்திருந்தால், ஒர் அட்டகாசமான கடைசி ‘மிஷன்’ படமாக இருந்திருக்கும்.