இந்தியாவில் தெலங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பகிடேரு கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து, மோட்டார்களோ வேறு எந்த உபகரணங்களோ இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக 365 நாட்களும் 24 மணி நேரமும் வெந்நீர் வந்துகொண்டிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். எப்படி? விரிவாக பார்ப்போம்.
தெலங்கானாவின் பகிடேரு கிராமத்திற்கு சென்று வெந்நீர் வரும் ஆழ்துளை கிணறு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது, பிபிசி. அதில், “இந்த பகுதியில் அதிக நிலக்கரி இருக்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி வளங்களை பற்றி தெரிந்துகொள்ள, 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் சோதனை செய்வதற்காக ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. அத்துடன் 1000 முதல் 2000 மீட்டர் ஆழத்திற்கு வேறு சில ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அவற்றிலிருந்து வெந்நீர் பெருக்கெடுத்து வந்தது. இது விவசாயத்திற்கு அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்கு பயன்படும் என நினைத்து இதனை மூடாமல் வைத்தனர். அப்போது முதல் 24 மணி நேரமும் நீர் வந்துகொண்டிருக்கிறது. ஆழ்துளை கிணற்றிலிருந்து வெந்நீர் தானாக வெளியேறுகிறது. மின்சாரம், மோட்டார் போன்றவற்றின் உதவியின்றி தண்ணீர் வருகிறது”, என்று பகிடேரு கிராமத்தை சேர்ந்த கோரம் ராம்பாண்டு சொல்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், “சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய புவியியல் ஆய்வு மையம் பகிடேரு கிராமத்தின் அருகே 8 ஆழ்துளை கிணறுகளை தோண்டியது. சுமார் ஒரு கிலோமீட்டர் ஆழம் வரை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டன. இந்தப் பகுதியில் புவிவெப்ப ஆற்றல் (geothermal energy) இருந்ததற்கான அடையாளம் இருந்ததால் இங்கு இந்த கிணறுகள் தோண்டப்பட்டன. இவை தோண்டப்பட்ட நாளில் இருந்து, பூமியில் உள்ள அழுத்தம் காரணமாக இதிலிருந்து வெந்நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நீரின் வெப்பம் கிட்டதட்ட 60 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த நீரில் அதிக அளவில் கந்தகம் இருக்கின்றது”, என்று இங்குள்ள சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தின் பொது மேலாளர் துர்கம் ராமசந்தர் தெரிவித்தார்.
“பூமியின் உட்புறத்தில் பல வெடிப்புகள் இருப்பதும், ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் வெந்நீர் இருப்பதும்தான், இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து வெந்நீர் வருவதற்கான காரணமாக இருப்பதாக கருதப்படுகின்றது”, என்று ராமசந்தர் கூறினார். இருப்பினும், இதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பகிடேரு கிராமத்தில் இந்த ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் வெந்நீரை பயன்படுத்தி சுமார் 200 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆழ்துளை கிணறுகளிலிருந்து வரும் இந்த வெந்நீரானது, குளங்களில் ஒருநாள் தேக்கி வைக்கப்பட்டு அதற்கு அடுத்த நாள் வயல்களில் பாசனத்துக்காக திறந்துவிடப்படுகிறது. “முன்னதாக இந்த வெந்நீரை நெல் சாகுபடிக்கு பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. தற்போது இந்த வெந்நீரை ஆற வைத்து பயன்படுத்துவதன் மூலம் நான் இரண்டு ஏக்கர் நிலத்தில் இரண்டு போகம் சாகுபடி செய்கிறேன். இதற்கு முன்பு ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கிறது. கொதிக்கும் சூட்டில் உள்ள இந்த நீரானது, குளங்களில் சேகரித்து, ஆறவைக்கப்பட்டு பின்னர் வயல்களுக்கு பாசனத்துக்காக அனுப்பப்படுகிறது,” என்று விவசாயி பத்ரய்யா கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, இரண்டு ஆழ்துளை கிணறுகளில் இருந்து வந்த வெந்நீர் நின்றுவிட்டதாகவும், மீண்டும் ஆழ்துளை கிணறுகளை தோண்ட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
“டிசம்பர் 4ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இரண்டு ஆழ்துளை கிணறுகள் முழுமையாக சேதமடைந்துவிட்டன. விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஆழ்துளை கிணறுகளை இழந்துவிட்டதால் அவர்களுக்கு கடினமானதாக இருக்கின்றது. அரசாங்கம் இதற்கு தீர்வு கண்டு, ஆழ்துளை கிணறுகளை மீண்டும் தோண்டி தண்ணீர் கொண்டுவரவேண்டும்” என்று விவசாயி சோம நரசய்யா கூறினார்.
இந்த ஆழ்துளை கிணறுகளே தங்களது வாழ்வாதாரம் எனக் கூறும் இந்த கிராமத்தை சேர்ந்தவர்களான பி. நாகம்மா மற்றும் வெல்லெட்டி சுகுணா, ஏற்கனவே இருக்கும் ஆழ்துளை கிணறுகளுடன் சேர்த்து புதிய ஆழ்துளை கிணறுகளையும் அரசு அமைத்துத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த ஆழ்துளை கிணறுகள் காரணமாக, பகிடெரு கிராமம் தனிச்சிறப்பை அடைந்துள்ளது. இப்போது இந்த வெந்நீர் ஆழ்துளை கிணறுகளை காண சுற்றுலா பயணிகள் வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
“எங்கள் பகிடெரு கிராமத்தில் உள்ள கிணறுகளிலிருந்து வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வெந்நீர் வருவதால், எங்கள் கிராமம் தனிசிறப்பு பெற்ற கிராமமாகிவிட்டது. எங்கள் கிராமத்தைக் காண பலர் வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது”, என்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தாடி பிக்ஷம் மற்றும் இந்த கிராமத்தைச் சேர்ந்த குஞ்சா ரேவதி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
ஆனால், உள்ளூர் மக்களால் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் சாதாரண வெப்பத்தில் நீர் வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணறு 300 மீட்டர் ஆழத்திற்கு அமைத்தால் தண்ணீர் பொங்கி வழியும் எனவும் அவர்கள் சொல்கின்றனர்.
வெந்நீர் தொடர்ந்து 55 முதல் 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வருவதால் அதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக ராமசந்தர் தெரிவித்தார். “அனல் மின் நிலையத்தில், நாம் நிலக்கரியை எரித்து, தண்ணீரை சூடாக்கி, மின்சாரம் தயாரிக்கிறோம். அதேபோல், இங்கு புவிவெப்ப ஆற்றலினால் சூடாக வரும் இந்த நீரை பயன்படுத்தி ஏன் மின்சாரம் தயாரிக்கக் கூடாது? அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ், டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைத்துள்ளோம்”, என்றும் அவர் தெரிவித்தார்.
”தற்போது பகிடெருவில் 20 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில் ஒரு புவி வெப்ப ஆற்றல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது” எனவும் ராமசந்தர் தெரிவித்தார். “20 கிலோவாட் மின் உற்பத்தி வெற்றி பெற்றால், இது இந்தியாவில் இத்தகைய முதல் திட்டமாக இருக்கும்”, என்றும் அவர் கூறினார்.
புவிவெப்ப ஆற்றல் ஆலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது அது முதலில் தங்களது கிராமத்தில் இருக்கும் தெருவிளக்குகளை எரியவைக்க பயன்படுத்தப்படவேண்டும் என பகிடேரு பஞ்சாயந்து தலைவர் சாவித்ரி கேட்டுக்கொண்டார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.