ப்ரியா மணி ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் அவர் இளமையாக இருந்த நேரத்தை விட, திருமணம் ஆகாமல் இருந்த காலகட்டத்தைவிட இப்பொழுதுதான் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன என்பதுதான்.
ப்ரியா மணிக்கு தமிழில்தான் வாய்ப்பு இல்லையே தவிர, ஹிந்தி, தெலுங்கு, வெப் சிரீஸ் என மற்ற மொழி சினிமாக்களிலும் வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறதாம்.
‘எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் என இன்றைக்கு திருமணமான என் சக நடிகைகள் சினிமாவுல தூள் கிளப்புறாங்க. திருமணம் ஆனால் மார்கெட் இருக்காது என்ற ஒரு மாயையை உடைத்து இருக்கிறார்கள்.
இப்போது சினிமாவிலோ அல்லது வெப் சிரீஸிலோ நல்ல வாய்ப்புகளைத் தேடிப்பிடித்து கொண்டுவர நிறைய ஏஜென்ஸிகள் இருக்கின்றன. இதனால் அக்கா, அண்ணி, அம்மா, அத்தை கதாபாத்திரங்களில் இல்லாமல் கதாநாயகிகளாகவும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.
திருமணமானால் மீண்டும் நடிக்க வரலாம், எங்களுக்கென எழுதப்படுகிற கதைகள் இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது சமீப காலமாக மாறி வரும் ரசிகர்களின் ரசனை. இனி கதாநாயகிகளுக்கு திருமணம் என்பது ஒரு தடையாக இருக்காது.’ என்று உற்சாகமாக கூறுகிறார் ப்ரியா மணி.
ப்ரியா மணி இங்கே கதாநாயகியாக நடித்த போது வாங்கிய சம்பளத்தைவிட, இப்போது திருமணமாகி இரண்டாவது சுற்றில் இறங்கியிருக்குப் போதுதான் அதிக சம்பளம் வாங்குகிறாராம்.
உண்மையில் ப்ரியா மணி இப்போதுதான் கோடியில் சம்பளம் வாங்க ஆரம்பித்திருகிறார் என்கிறார்கள்.
திருமணமான பின்பும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் என பல முன்னணி நடிகைகள் நடித்தப் படங்கள் வசூல் விஷயத்தில் எதையும் புரட்டிப் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாப்ஸியின் பாலிஸி
நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைருக்கிறார்கள். தங்களது திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மேனேஜர்களை விட்டு ஏதாவது ஒடிடி தளத்தில் பேச சொல்கிறார்கள்.
மேடம் கல்யாணத்தை உங்கள் ஓடிடி-யில் எக்ஸ்க்ளூசிவ்வாக ஸ்ட்ரீம் செய்யுங்கள். வேறு யாருக்கும் நாங்கள் கல்யாணத்தில் எடுக்கும் வீடியோவை கொடுக்க மாட்டோம். அதற்கு இவ்வளவு கொடுத்தால் ஒகே’ என்று வியாபாரம் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
இப்படி காசு பார்த்ததில் நயன்தாரா 5 கோடி வரை நெட்ஃப்ளிக்ஸிடம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதே போல் ஹன்சிகா மோத்வானி ஒரு கோடி வாங்கியதாகவும் தெரிகிறது.
ஆனால் வெள்ளாவியில் வைத்து வெளுத்தெடுத்ததைப் போல் பளீச்சென்று இருக்கும் தாப்ஸி சமீபத்தில்தான் தனது நீண்ட கால நண்பர் மத்தியாஸ் போயெவைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஹிந்திப் படங்களும் நடித்திருக்கிறார். ஷாரூக்கானுடன் ‘டங்கி’ படத்திலும் நடித்திருக்கிறார். மாப்பிள்ளை டென்மார்க்கைச் சேர்ந்தவர், பாட்மிண்டன் விளையாட்டு வீரர்.
இந்த காம்பினேஷன் திருமணம், இரு நாட்டு கலாச்சாரங்களைக் கலந்து இருக்கும் என்பதால், தாப்ஸிக்கு திருமணம் என்றதுமே ஒடிடி- தளங்கள் ஓடிப்போய் தாப்ஸி தரப்பை அணுகி இருக்கின்றன.
ஆனால் தாப்ஸி என் திருமணத்தை ஒடிடி-யில் ஸ்ட்ரீம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்றாராம். இதனால் போட்டிப்போட்டுகொண்டு திருமண ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்க, பெரும் தொகையை ஒடிடி நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.
’திருமணம் என்பது என்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் உறவினர்கள், நண்பர்கள் பங்கு பெறலாம். வந்து ஆசீர்வதிக்கலாம். திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் இதில் மீடியாவுக்கோ மற்றவர்களுக்கோ எதுவுமில்லையே. எனது திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ப்ரைவஸி ரொம்பவே முக்கியம். அவர்கள் எந்தவிதத்திலும் தங்களது ப்ரைவஸி பறிப்போய் விடுமோ என்று சங்கடப்படக்கூடாது.
அதனால் கோடி கொடுத்தாலும், அந்த நிம்மதி இருக்காது. என்னுடைய கல்யாணம் எனக்கும் என் கணவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டும் இருந்தால் போது, ஒடிடி-யில் பார்த்து யாரும் கொண்டாட தேவையில்லை’ என்று மறுத்து விட்டாராம்.