காவலதுறை உயர் அதிகாரியான விஜய் ஆண்டனி ஒரு சீரியல் கொலைகாரனைப் பிடிக்க சென்னை வருகிறார். இதற்கான போலீஸ் திட்டமிட்டு நகர, இன்னொரு பக்கம் கொலையாளியும் அவர்களைப் பின் தொடருகிறான். அவன் அஜய் கிஷான் ஆனால், அவருக்கு இருக்கும் அதீத ஞாபகசக்தி மூலம் சில துப்புகள் கிடைக்கின்றன. அவனை வைத்தே கொலைக்கான காரணத்தை கண்டு பிடிக்கிறது போலீஸ். இதில் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள்தான் படம்.
இதுவரைக்குமான சீரியல் கொலைகள் இல்லாமல் வித்தியாசமான நிறம் மாற்றி கொலை செய்யும் உத்தியை படத்தில் காட்டியிருக்கிறார். இயக்குநர், லியோ ஜான் பால். ஆனால், அஜய் திஷான் விசாரணைக்குள் வருவதும் அவர் தொடர்பான காட்சிகளும் படத்தை மெதுவாகக் கடத்துகின்றன. அதே நேரத்தில் அவருடைய நீச்சல் திறமையைக் கொண்டு குற்றத்தின் முடிச்சுகளை அவிழ்க்க இயக்குநர் கையாண்டிருக்கும் விதம் ரசிக்க முடிகிறது. இதில் சித்தர்களைக் கொண்டு வந்ததும் அதன் சுவராஸ்யம் கெடுகிறது.
விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக சில விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு காட்சியும் அவரை வைத்தே கண்டுபிடிக்க நினைப்பது கம்பீரமான காவல் துறைக்கு அழகாக இல்லை. அதீத ஞாபகசக்தி, அபார நீச்சல் திறமை மூலம் பின்னோக்கிச் சென்று தடயத்தையும் கொலைகாரனையும் தேடுவது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அஃக்வாமேனை நினைவு படுத்துகிறது. அதை இன்னும் நம்பும்படியாக சொல்லியிருக்கலாம். விஜய் ஆண்டனி பாத்திரத்தை விட அஜய் கிஷான் பாத்திரத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதால் போலீஸ் அதிகாரி பாத்திரம் அடிபடுகிறது. விஜய் ஆண்டனியும் பல காட்சிகளில் மவுனமாகவே நடிப்பை காட்டியிருக்கிறார்.
திரைக்கதையில் தெளிவு இல்லாததால் குழப்பமான கொலை திரில்லராக இது அமைந்து விட்டது.
‘மகாநதி’ சங்கர், அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனி, பிரிகிடா சாகாவின் கதாபாத்திரங்களுக்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். பிரித்திகா, வினோத் சாகர், ராமச்சந்திரன் துரைராஜ் பலரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையில் விஜய் ஆண்டனி திறமை தெரிகிறது. எஸ். யுவாவின் ஓளிப்பதிவு அழகு.