மலையாள சினிமாவின் மம்முக்காவும், லாலேட்டன்னும், இன்னும் பிற ப்ரித்வி ராஜ், நிவின் பாலி, ஃபஹத் பாசில் என முன்னணி நட்சத்திரங்களும் கொஞ்சம் அரண்டுப் போய்தான் இருக்கிறார்கள்.
காரணம், ’மஞ்சுமேல் பாய்ஸ்’.
இந்தப் படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ஒரே சமூக ஊடகப் பதிவு இப்படத்திற்கு பெரும் விளம்பரமாகிப் போனது, இதனால் படத்தில் நடித்த ஒட்டுமொத்த குழுவும் சென்னைக்குப் பறந்து வந்தனர். உதயநிதியைச் சந்தித்தவர்கள் அப்படியே துபாய் போனார்கள்.
மீண்டும் சென்னைக்கு திரும்பிய அப்பட இயக்குநர் சிதம்பரம், கோலிவுட்டில் முன்னணி இருக்கும் நடிகர்கள் வீட்டிற்கே சென்று அவர்களைச் சந்தித்தார். அவர்களுடன் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும், ஒரு கோடி மதிப்புள்ள விளம்பரத்தை தேடி கொடுத்திருக்கிறது.
இதற்கிடையில் கமல் ஹாஸன் நடித்த ‘குணா’ படப்பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்’ மீண்டும் வைரல் பாடலானது.
இதெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல கமர்ஷியல் சினிமாவை தமிழ்நாட்டு திரையரங்குகளில் திரையிட வைத்துவிட்டது.
நேரடி தமிழ்ப்படங்களுக்குப் போட்டியாக பெரும்பான்மையான திரையரங்குகளில் மஞ்சுமேல் பாய்ஸ் படம் திரையிடப்பட்டது.
இதன் மூலம் இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 50 கோடி வசூலாகி இருப்பதாக தமிழ் சினிமா வியாபார வட்டத்தில் கூறுகிறார்கள்.
இந்த 50 கோடி வசூல் என்பது இதுவரையில் எந்த மலையாள திரைப்படமும் பார்த்திராத வசூல். மம்மூட்டி, மோகன் லால் படங்கள் கூட இத்தனை கோடி வசூலை தமிழ்நாட்டில் எடுத்தது இல்லை.
’மஞ்சுமேல் பாய்ஸ்’ படம் கமலின் ‘குணா’ படத்துடன் இணைத்து பேசப்பட, ரசிக்கப்பட அதன் வெற்றி மலையாளப் படங்களின் மத்தியில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 175 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்நிலையில் தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமும், அஜித் குமாரை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தயாரிக்க இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்தான் தெலுங்கில் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பு தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் கிடைக்குமா என்பது இனிதான் தெரியும்.
துருவ் விக்ரம் ஜோடிக்கு 2 வயது அதிகம்
நடிப்பில் இரண்டாவது சிவாஜி என்று பெயரெடுத்த விக்ரமிற்கு சமீபகாலமாக வெற்றிப்படங்கள் எதுவுமில்லை.
பெரும் பட்ஜெட்டில் இவர் நடித்தப் படங்கள் எல்லாமும் காலை வாரிவிட்டுவிட்டன. இதனால் இவர் பெரிதும் நம்பியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் எதுவுமில்லை. அடுத்து ‘தங்கலான்’. இதுவும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் இருப்பதால், இதன் வெளியீடும் கொஞ்சம் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.
இதனால் வேறெந்த படங்களிலும் நடிக்காமல் காத்திருக்கிறார். இதுவே விக்ரமிற்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது என்றாலும் மற்றுமொரு பிரச்சினையும் விக்ரமிற்கு வருத்தத்தைக் கொடுத்து வருகிறதாம்.
தனது மகன் துருவ், சினிமாவில் நடிப்பு என் தொழில் என்று முடிவு செய்துவிட்ட பிறகு, சரியான படம் அமையாமல் இருப்பதால் ரொம்பவே அப்செட்டாம். தனக்கு ஒரு ப்ரேக் கொடுத்த பாலா, தனது மகனுக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ பட ரீமேக் மூலம் கொடுப்பார் என்று நம்பியிருந்த நிலையில், பாலாவுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மோதல் உண்டாக, அவர் எடுத்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
’அர்ஜூன் ரெட்டி’ படத்தை எடுத்த சந்தீப் ரெட்டி வங்காவின் உதவி இயக்குநரை வைத்து எடுத்த ’வர்மா’ படம் வர்மப்பிடியில் சிக்கிய போல் சுருண்டு விழுந்துவிட்டது.
அப்பாவுடன் இணைந்து நடித்த ‘மகான்’ படமும் காலை வாரிவிடவே, துருவ் விக்ரம் இப்போது ஒரு நல்லப்படம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் நீண்ட காலமாக பேச்சுவார்த்தையிலேயே இருந்து வந்தது.. இப்போது ஒரு வழியாக தங்கலான் படத்தை இயக்கும் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும், அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட்டும் சேர்ந்து தயாரிக்க இருக்கிறதாம்.
இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக, ’ப்ரேமம்’ மலையாளப் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருக்கிறார்.
இவர் மலையாளத்திலிருந்து தெலுங்குப் பக்கம் போய், க்ளாமர் ஆகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். லிப் லாக் காட்சியா 50 லட்சம் கூட கொடுங்கள் என சம்பளத்தை ஏற்றிவிட்டார்.