இந்திய வரைபடத்தைப் பார்த்தால் வட கிழக்கு ஒரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல் அழகாய் காட்சியளிக்கும் மாநிலம் மணிப்பூர். நான்கு பக்கம் மலை. நடுவே ஒரு தட்டு போல் ஒரு பள்ளத்தாக்கு இதுதான் மணிப்பூர்.
சின்ன மாநிலம். மொத்த மக்கள் தொகையே 28 லட்சம்தான். இந்த அழகிய சிறு மாநிலம் இன்று எரிந்துக் கொண்டிருக்கிறது. காரணம் சாதியும் அரசியல்வாதிகளும்.
மணிப்பூர் ஒரு வித்தியாசமான சமூக பரவலைக் கொண்டுள்ள மாநிலம்.
இங்கு மெய்தே சமூகத்தினர்தான் சதவீத அடிப்படையில் அதிகம். சுமார் 53 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அடுத்து நாகா சமூகத்தை சார்ந்தவர்கள், குகி, சோமி போன்ற பழங்குடி சமூகத்தை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். மணிப்பூரில் 35 பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன.
மலைகளுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கை கொண்ட அமைப்பாக மணிப்பூர் இருக்கிறது. இதில் 90 சதவீதம் மலைப்பகுதிகள், 10 சதவீதம் பள்ளத்தாக்கு பகுதிகள்.
இதில் விசித்திரம் என்னவென்றால் 53 சதவீதத்தை சார்ந்த மெய்தே மக்கள் வசிப்பது 10 சதவீத பள்ளத்தாக்கு பகுதிகளில்.
மீதமிருக்கும் 90 சதவீத மலைக்காடுகளில் வசிப்பவர்கள் 47 சதவீத பழங்குடி மக்கள்.
மணிப்பூரில் உள்ள 16 மாவட்டங்களில் ஐந்துதான் பள்ளத்தாக்கில் இருக்கிறது. 11 மாவட்டங்கள் மலைப்பகுதிகளில் இருக்கின்றன.
மணிப்பூரில் பழங்குடி பாதுகாப்பு சட்டம் இருப்பதால் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசிக்கும் மெய்தே சமூகத்து மக்கள் மலைப்பகுதிகளில் நிலம் வாங்க இயலாது. அதற்கு அவர்கள் உள்ளூர் மக்கள் அனுமதி பெற வேண்டும்.
அது மட்டுமின்றி பெரும்பான்மையாக இருக்கும் மெய்தே மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வருகிறார்கள். பழங்குடி மக்கள் எஸ்.டி. பிரிவில் வருகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் பள்ளாத்தாக்கில் வசிக்கும் மெய்தே சமூக மக்கள் இந்துக்கள். ஆனால் மலைப்பகுதிகளில் வசிக்கும் எஸ்.டி பிரிவு பழங்குடியினரில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
சின்ன ஊர். சின்ன மக்கள் தொகை. அதில் இத்தனை வித்தியாசங்கள்.
பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தே சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை தங்களை பழங்குடியினரின் பட்டியலினத்தில் சேர்க்க வேண்டுமென்பது.
ஆனால் அவர்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பது மலைவாழ் பழங்குடி சமூகத்தினரின் கோரிக்கை.
ஆனால் மெய்தே சமூகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கலாம் என்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகுதான் இந்தக் கலவரங்கள், பதற்றங்கள்.
பள்ளத்தாக்கு மக்களுக்கு பழங்குடியின அடையாளத்தை தந்தால் நாங்கள் வாழும் மலைப் பிரதேசங்களை ஆக்கிரமித்து எங்கள் இடங்களை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்பது மலைவாழ் பழங்குடியினரின் அச்சம். அது போராட்டங்களாய் வெடித்திருக்கிறது.
நாங்களும் பழங்குடியினர்தான் என்பது மெய்தே சமூக மக்களின் கருத்து.
நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே பழங்குடி மக்களுக்கும் பள்ளத்தாக்கு மக்களுக்கு மோதல்கள் இருந்துக் கொண்டே இருந்தன. அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் பழங்குடி மக்களின் கோபத்தை கிளறிவிட்டிருந்தது.
உதாரணமாய், மலைப்பிரதேசங்களில் சட்டவிரோதமாய் கட்டப்பட்ட கட்டிடங்கள் என பல கட்டிடங்கள் அகற்றப்பட்டன. அவற்றில் கிறிஸ்துவ தேவாலயங்களும் உண்டு. இந்த சம்பவங்கள் பிரேன் சிங் அரசின் மீது பழங்குடி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முதல்வர் பிரேன் சிங் மெய்தே சமூகத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலவரத்தின் அடிப்படையில் அரசியலும் இருக்கிறது என்ற கருத்தும் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன. இந்தப் பிரிவுகளையும் பிளவுகளையும் அரசியல் கட்சிகள் அவ்வப்போது தங்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
2017ல் மணிப்பூர் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றிப் பெற்றது. பாஜக 21 இடங்களில் வெற்றிப் பெற்றது. மொத்த இடங்கள் 60. சிறு கட்சிகளையும் சுயேச்சைகளையும் இணைத்துக் கொண்டு பாஜக ஆட்சி அமைத்தது. காங்கிரசிலிருந்து வந்த பிரேன் சிங்கை முதல்வராக்கியது பாஜக.
2022-ல் தேர்தல் வந்தது. இந்த முறை 32 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது பாஜக.
ஒவ்வொரு முறையும் போராடித்தான் வெல்ல முடிகிறது, 53 சதவீதம் இருக்கும் மெய்தே சமூகத்து மக்களின் முழுமையான ஆதரவு கிடைத்தால் நம்மால் எளிதில் வெல்ல முடியும் என்று பாஜக கணக்குப் போடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜகவின் அரசியல் எப்போதுமே பெரும்பான்மை சமூகத்தினரை சார்ந்துதான் இருக்கும். அதனால் மெய்தே சமூகத்து மக்களை பழங்குடியனர் பட்டியலில் சேர்க்க முயலுகிறது என்று பாஜக மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் 53 சதவீத மெய்தே சமூகத்து மக்கள் இந்துக்களாக இருப்பதால் பாஜகவின் பக்கம் முழுமையாக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் கணக்குப் போடுகிறார்கள்.
ஆனால் இது ஏப்ரல் 20-ல் வெளிவந்த மணிப்பூர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடக்கிறது, இதில் பாஜகவின் அரசியல் இல்லை என்று தள்ளிப் போகிறது பாஜக.
ஒரு சிறிய மாநிலம் எரிந்துக் கொண்டிருக்கிறது. அணைப்பவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.