மாம்பழம் முதலில் இந்தியாவிலிருந்து ஆசியாவின் பிற பகுதிகளுக்கு பரவியது. 7ம் நுாற்றாண்டில், சீனப் பயணி யுவான் சுவாங் இதை அறிமுகப்படுத்தினார்.
மாம்பழத்தின் தாயகம், இந்தியா. குறிப்பாக, வட கிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான பிரதேசத்தில், இது தோன்றியதாக கூறப்படுகிறது. 4,000 ஆண்டுகளுக்கு முன், இங்கு மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டன.
கடந்த 9 மற்றும் 10ம் நுாற்றாண்டுகளில், அரபு மற்றும் பாரசீக வணிகர்கள், மாம்பழத்தை கிழக்கு ஆப்ரிக்காவுக்கு கொண்டு சென்றனர். பின்னர், 15ம் நுாற்றாண்டில், இந்தியாவிலிருந்து மேற்கு ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவுக்கு பரப்பினர், போர்த்துகீசியர்கள். காலனித்துவ காலத்தில், உலகமெங்கும் மாம்பழம் பரவியது.
மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி6, நார்ச்சத்து, பொட்டாஷியம், மெக்னீஷியம் மற்றும் புரதம் ஆகிய சத்துகள் உள்ளன. தினசரி வைட்டமின் சி தேவையில், 67 சதவீதத்தை ஒரு கப் மாம்பழம் ஈடு செய்கிறது.
இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; கண் பார்வையை மேம்படுத்துகிறது; செரிமானத்தை சீராக்குகிறது; இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
உலகில், 500க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன. தமிழகத்தில், அல்போன்சா வகை மாம்பழம் மிகுந்த சுவையானது. மல்கோவா, கூழ் நிறைந்தது. பங்கனப்பள்ளி இனிப்பு மிகுந்தது. செந்துாரம், நீலம், இமாம் பசந்த் போன்றவை மக்களிடத்தில் பிரபலமானவை.
மாம்பழ உற்பத்தியில் இந்தியா, முன்னணியில் உள்ளது. உலகளவில், 42 சதவீத அளவிற்கு, 2 கோடி டன் அளவிற்கு உற்பத்தி செய்கிறது. அதற்கடுத்து, சீனா, தாய்லாந்து, மெக்சிகோ மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பிடிக்கின்றன.
மாம்பழ நுகர்விலும், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டு நுகர்வு, ஏற்றுமதியை விட அதிகம்.
உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழம், ஜப்பானின் மியாசாகி. ஒரு கிலோ, 2.7 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு பழம், 350 கிராம் எடையும், ஊதா – சிவப்பு நிறமும் கொண்டது. ‘டிராகன் முட்டை’ என, அழைக்கப்படும் இது, அரிதாக கிடைப்பதால் விலை அதிகம்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பழம், மாம்பழம். வங்கதேசத்தின் தேசிய மரம், மாமரம்.
முகலாயப் பேரரசர் அக்பர், ஒரு லட்சம் மாமரங்களை நட்டார். தமிழ் சொல்லான மாங்காய் மற்றும் போர்த்துகீசிய சொல்லான மாங்கா என்பதிலிருந்து, மாங்கோ என்ற சொல் வந்தது.
மாமரங்கள், 150 அடி உயரம் வரை வளர்ந்து, 30 ஆண்டுகள் பழம் தரும்.
புத்தர், தன் பயணங்களின் போது, மாமரத் தோப்புகளில் ஓய்வெடுத்ததாக, பவுத்த நுால்கள் கூறுகின்றன. இதனால், மாமரம், புத்த மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது. இந்தியாவின் ராஜ்கரில், புத்தர் ஓய்வெடுத்த மாமரத் தோப்பு, இன்றும் பிரபலம்.
பிலிப்பைன்ஸ் நாட்டில், 2009ல், 3 கிலோ எடையுள்ள மாம்பழம் பதிவு செய்யப்பட்டு, கின்னஸ் சாதனையாக உள்ளது. இது, சாதாரண மாம்பழத்தை விட, பத்து மடங்கு பெரியது.
இந்தியாவில் மா இலைகள், புனிதமாக கருதப்படுகின்றன. திருமணங்கள், பூஜைகளில் அலங்காரமாகவும், தீய சக்திகளை விரட்டுவதாக வீட்டு வாசல்களிலும் தொங்கவிடப்படுகின்றன.
அண்டை நாடான பாகிஸ்தானில், அன்வர் ரதோல் வகை மாம்பழம், அரசு அதிகாரிகளால், உலகத் தலைவர்களுக்கு பரிசாக அளிக்கப்படுவது வழக்கம். இந்தியாவும், அல்போன்சா மாம்பழங்களை பரிசாக வழங்கிய வரலாறு உண்டு.