பொங்கல் ரேசில் மதகஜராஜா படமும் இணையப் போவதாக வந்துள்ள செய்தி கோலிவுட்டில் பலரையும் புருவம் உயர வைத்துள்ளது.
சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் நடித்த இந்த படம், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானது. ஆனால் படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்கியூட் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால் படத்தை அவர்களால் இன்னமும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. சரி, இந்த முறையாவது ரிலீஸ் ஆகுமா? பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முயற்சி எடுப்பது யார் என்று கோலிவுட்டில் விசாரித்தோம்.
சுந்தர். சி இயக்கிய இந்த படம் பக்கா கமர்ஷியல் படமாக உருவானது. 2012ம் ஆண்டு நவம்பரில் மதகஜராஜாவை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஜெமினி நிறுவனம் தயாரித்த, வெளியிட்ட முந்தைய படங்கள் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியதால் இந்த பட ரிலீஸ் தள்ளிப்போனது. அடுத்தடுத்து நடந்த முயற்சிகளும் தடைபடவே, அவர்களால் இன்னமும் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. நான் இயக்கிய படங்களில் மதகஜராஜா அருமையான படம். குறிப்பாக, கடைசி 20 நிமிடம் அவ்வளவு நன்றாக இருக்கும்.
நானே படத்தை ரிலீஸ் செய்கிறேன் என்று இயக்குனர் சுந்தர்.சி பலமுறை சொல்லியும் அதற்கான வாய்ப்பு தரப்படவில்லை. ஹீரோவாக நடித்த விஷாலும் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இனி படம் வெளியாக வாய்ப்பில்லை. அவ்வளவுதான் என படக்குழுவும் நினைத்தது.
கடன் பிரச்னை, வேறு சில சட்ட பிரச்னைகள் காரணமாக மதகஜராஜா தவித்த நிலையில், ரெட் ஜெயன்ட் நிறுவனம் முயற்சி எடுத்து படத்தை வெளியிடுகிறது. படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பைனான்ஸ் பிரச்னைகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தமாம்.
ஆனாலும், பொங்கலுக்கு ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால், மதகஜராஜாவுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை. தவிர, அந்த சமயத்தில் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வந்தனர். பின்னர் பிரிந்துவிட்டனர். வரலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில் அவர்கள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வருவார்களா? படம் குறித்து சுந்தர்.சி. பேசுவாரா? வேறு தடைகள் வராமல் இருக்குமா?