நெல்லை மாவட்ட கிராமத்து பின்னணி, சுடலை மாடன் குல தெய்வ வழிபாடு, கொடை திருவிழா, கணியான் கூத்து என்ற நாட்டுப்புறக்கலை, காதல், மோதல் பின்னணியில் அழுத்தமான படமாக வந்துள்ளது மாடன் கொடை விழா.
இரா.தங்கபாண்டி இயக்கத்தில் புதுமுகங்கள் கோகுல் கவுதம், ஷர்மிஷா, சூர்யநாராயணன், சூப்பர்குட் சுப்பிரமணி உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னையில் வேலை பார்க்கும் ஹீரோ, பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டு சொந்த கிராமம் செல்கிறார். அவரோ நம்ம குல தெய்வம் சுடலை மாடனுக்கு கொடை விழா நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சொந்த பந்தங்கள் நேர்த்திகடன் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் என உருகுகிறார். சுடலை மாடன் கோயில் இருக்கும் இடத்தை வில்லனிடம் ஹீரோ அப்பா அடமானம் வைக்க, சிக்கல் வருகிறது. அந்த இடத்தை தரமுடியாது என்று வில்லன் எகிறி , என்ன நடக்கிறது. கொடை விழா நடந்ததா என்ற ரீதியில் கதை நகர்கிறது.
சில சீன்களிலேயே இது வழக்கமான படமல்ல என தெரிந்து விடுகிறது. கிராமத்து மனிதர்கள். அவர்களின் மனநிலை, குல தெய்வ வழிபாட்டின் பெருமைகள், கொடை நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் என அழுத்தமான, வித்தியாசமான திரைக்கதை நம்மை ரசிக்க வைக்கிறது. ஹீரோ, ஹீரோயின் உட்பட பலரும் புதுமுகங்கள் என்றாலும், அவர்களின் நடிப்பு, கதாபாத்திரங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது. கொடை திருவிழா பின்னணியில் கணியான் கூத்து என்ற நாட்டுப்புற கலை, அதை நாடும் திருநங்கை ஒருவரின் கேரக்டர் ஆகியவை மனதில் நிற்கிறது. ஹீரோயின் ஷர்மிஷாவின் துறுதுறுப்பு, திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் அருமை.
சற்றே மெதுவாக திரைக்கதை நகர்ந்தாலும், திருப்பங்களும், இடையிடடையே வரும் ஹீரோயின் காதல் காட்சிகளும் ஆறுதல். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காந்தாரா பட பாணியில் ரொம்பவே ஆவேமாக இருக்கிறது. கொடை திருவிழா, சாமியாட்டம், பழிவாங்கல், மன்னிப்பு, காதல், பாசம் என பல விஷயங்களை கலந்து, தான் ஒரு திறமையான ஒரு இயக்குனர் என்பதை இரா.தங்கபாண்டி நிரூபித்துள்ளார்.