மெட்ராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன். இதுதான் எம். ஆர். ராதாவின் இயற்பெயர்.
தந்தை பெரியாரின் முரட்டு பக்தர் எம்.ஆர்.ராதா. பெரியாரைத் தவிர அவர் யாரிடமும் பணிந்ததில்லை. திரையுலகில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை கே. பி. சுந்தராம்பாள் என்பார்கள். நடிகர்களில் ஒரு லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்ற முதல் நடிகர் எம்.ஆர். ராதாதான்.
பிரபல இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் ‘பட்டினத்தார்’ என்ற படத்தை தயாரித்தார். அதில் எம்.ஆர்.ராதாவும் நடித்தார். பாடகர் டி.எம்.எஸ்தான் ஹீரோ. படத்தை முடிக்கும் தருவாயில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. இருந்த பணத்தையெல்லாம் படத்தில் முதலீடு செய்து விட்டார். ஒரு வழியாக படம் முடிந்தது. ஆனால் பல நடிகர்களுக்கும் டெக்னீசியன்களுக்கும் பாக்கி இருந்தது. பணத்தை அவரால் செட்டில் பண்ண முடியாத நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்தார்.
ஒருநாள் ராதாவைத் தேடி வந்தார்.
“அண்ணே நான் உங்களுக்கு தரவேண்டிய பாக்கி 30 ஆயிரம் ரூபாய். என்னால் 10 ஆயிரம்தான் புரட்ட முடிந்தது. இதை வைத்துக்கொண்டு 30,000 ரூபாய் பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டுக் கொடுங்கள்” என்றார்.
உடனே வவுச்சரை வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்ததோடு, அவர் கொடுத்த பத்தாயிரத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்தார் ராதா.
“இதை வச்சுக்கோ. வேற நடிகன் யாருக்காவது பாக்கி இருந்தால் அவனுக்கு கொடு, அப்புறம் பார்த்துக்கலாம்” என்று சொல்லி அனுப்பினார். எம் ஆர் ராதாவின்.பெருந்தன்மையைக் கண்டு இசையமைப்பாளர் ஜி. ராமநாதன் கண்கலங்கினார்.
பெரியாரிய சுயமரியாதை இயக்கத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்த காலம் அது. ஒருமுறை வெளியூரில் நாடகம் போடப் போனபோது. ராதாவின் நாடகத்தை நடத்த விடாமல் செய்ய ஒரு கும்பல் வந்தது. எதிர்ப்புக்கு அஞ்சாத ராதா நாடகத்தை நடத்தினார். நாடகம் முடிந்து ராதா வெளியே வரும்போது அவரைத் தாக்க நாடகக் கொட்டகை வாயிலில் அந்த கும்பல் காத்திருந்தது. கடைசி காட்சியும் முடிந்து விட்டது. ஆனால் ராதா வெளியே வரவில்லை.
எப்படி தப்புவது என்று யோசனை செய்தார். நாடகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க சில போலீசார் வந்திருந்தனர். அவர்கள் நாடக அரங்கத்திற்குள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தனர்.
ராதா மேக்கப் ரூமுக்குள் போனார். ஒரு போலீஸ் உடையைப் போட்டுக்கொண்டு, மேடையின் பக்கவாட்டில் இருந்து இறங்கி கூட்டத்தை சரி செய்வது போல.பாவனை செய்துக்கொண்டே அரங்கத்தை விட்டு வெளியேறி தன் இருப்பிடத்துக்கு போய்விட்டார்.
கலைஞர் கதை வசனம் எழுதிய ‘வண்டிக்காரன் மகன்’ படத்தில் ராதா நடித்தார். அவர் ஒரு குதிரை மீது ஏறி தப்புவார். பின்னால் ஹீரோ வேறொரு குதிரையில் அவரை துரத்திக் கொண்டு வருவார்.
ராதா ஏறிய குதிரை சிறிது தூரம் போனதும் தன் போக்கில் தறிகெட்டு ரொம்ப வேகமாக ஓடத் தொடங்கி விட்டது. ராதா லகானை இழுத்து பிடித்தும் குதிரை கட்டுப்படவில்லை.
ஒரு வழியாக குதிரையை நிறுத்திய ராதா யூனிட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘ ஏன்யா எனக்கு பின்னாலே வந்த குதிரை பொட்ட குதிரையா’? என்று விசாரித்தார். பிறகுதான் அவர்களும் அது பெண் குதிரை என்பதை தெரிந்துகொண்டனர்.
“அதனால்தான் என் குதிரைக்கு எதோ மூடு வந்துட்டது… அந்த கிறுக்கத்திலேயே தான் தறிகெட்டு ஓடுது. எப்பவும் இரண்டு குதிரை பயன் படுத்தும் போது இரண்டையும் பெண்ணாக, அல்லது இரண்டும் ஆணாக இருக்கணும்” என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார் ராதா.
பிரபல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவா தலைமறைவாக இருந்தபோது. அவருக்கு எம்.ஆர்.ராதா பாதுகாப்பு கொடுத்தார். ஜீவாவுக்கு பல வேஷங்கள் போட்டு அவ்வப்போது தன்னுடைய நாடக நடிகர்களில் ஒருவராக வைத்துக் கொண்டார். இப்படி இருக்கும்போது அவ்வப்போது ஜீவா சில கடிதங்கள் எழுதி கொடுப்பார் கடிதங்களை கொண்டு போய் குறிப்பிட்ட பெண்மணியிடம் கொடுத்து.அவர் தரும் கடிததத்தை வாங்கி வந்து கொடுப்பார் எம்.ஆர்.ராதா.
அந்தக் கடிதங்கள் எல்லாம் ஏதோ ரகசிய புரட்சித் திட்டம் பற்றிய கடிதங்கள் என்று ராதா நினைத்திருந்தார். ஆனால் அவை காதல் கடிதங்கள். . ஜீவாவின் காதலுக்காக தூது போனது
இதுபற்றி எம்.ஆர்.ராதாவுக்கு தெரிந்ததும், ‘சரி… இதுவும் ஒரு புரட்சிதானே’ என்று கூறியிருக்கிறார்.