லென்ஸ், தலைக்கூத்தல் போன்ற பேசப்பட்ட படங்களை இயக்கிய, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் அடுத்த படம் ‘காதல் என்பது பொதுவுடமை.’ பிப்ரவரி 14ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய்பீம் படங்களில் நடித்த லிஜோமோல் ஹீரோயினாக நடித்துள்ளார். அப்பாவாக வினித், அம்மாவாக ரோகிணி நடித்துள்ளார். காதலர் தினத்தன்று வந்தாலும் இது லெஸ்பியன் சம்பந்தப்பட்ட கதை. லிஜோமோல் இணையாக அனுஷா நடித்துள்ளார். சென்னையில் நடந்த பாடல் வெளியீட்டுவிழாவில் ரோகிணி பேசியது
‘நான் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. 25 ஆண்டுகளாக ஹீரோயினாக, மற்ற குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். சில படங்களில் வித்தியாசமான, அழுத்தமான ரோல்கள் கிடைக்கின்றன. மறுபடியும், விருமாண்டி என அந்த படங்கள் இன்றும் பேசப்படுகின்றன. அந்த வரிசையில் காதல் என்பது பொதுவுடமை அமையும். எத்தனையோ படங்களில் அம்மாவாக நடித்து வருகிறேன். ஒவ்வொரு அம்மா கேரக்டரிலும் நிறைய வித்தியாசம். ஆனால், இந்த மாதிரி ஒரு அம்மா கேரக்டரில் நான் நடித்ததே இல்லை. இந்த கேரக்டரில் நடித்தபோது எனக்கு பல கேள்விகள் எழுந்தது. அந்த கேரக்டர் மூலமாக பல கேள்விகளை சமூகம் நோக்கி கேட்கிறார் இயக்குனர். இப்படிப்பட்ட கதைகள் தமிழில் வர வேண்டும். சமூகத்தில் விவாதிக்கப்பட வேண்டும். சில உரையாடல்கள் குடும்பத்தில் தொடங்க வேண்டும் என்று இயக்குனர் அருமையாக கூறியிருக்கிறார். ஒரு அம்மாவின் பரிதவிப்பையும் அழகாக காண்பித்து இருக்கிறார்கள்
முதலில் இந்த படத்தை தமிழில் எடுக்கலாம் என்று இயக்குனர் நினைத்தபோது, தமிழில் இந்த கதை வேண்டாம். மலையாளம், இந்தியில் பண்ணுங்க என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். தமிழில் ஓடாது என சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், பிடிவாதமாக தமிழில் எடுத்து இருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருக்கும் இருக்கிற உணர்வுகளை மதிக்கணும். அதுக்காவே இந்த படம். சில நாடுகளி்ல் இந்த உறவு முறை உள்ளவர்கள் திருமணம் செய்ய சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. இந்தியாவில் இந்தவகை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை. அது தேவை என்று அவர்கள் போராடுகிறார்கள். நான் தனிப்பட்ட கருத்து சொல்ல முடியாது. தவிர, இந்த படம் பார்த்து அப்படி யாரும் மாறமாட்டார்கள். அந்த உணர்வில் இருப்பவர்கள், இந்த படம் பார்த்துவிட்டு தைரியமாக தங்களை பற்ற பேசுவார்கள்’’ என்றார்