இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் அந்தோனியோ நெக்ரியோடு நிகழ்த்தப்பட்ட உரையாடல் நூல் ‘Negri on Negri’.
நெக்ரி தமிழ்நாட்டில் பேசப்படாத ஒரு சிந்தனையாளர். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாளக் கவிஞர் கே. சச்சிதானந்தனை நான் பேட்டி கண்டபோது அவர்தான் நெக்ரியின் பெயரைக் குறிப்பிடார். அதன்பிறகே நான் நெக்ரியின் நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்.
1933இல் இத்தாலியில் பிறந்த நெக்ரியின் வாழ்க்கை சாகசங்கள் நிறைந்தது. அவர் பேராசிரியராக இருந்தபோது இத்தாலியில் கலக நடவடிக்கைகளில் ஈடுபட்ட ‘ரெவல்யூஷனரி பிரிகேட்’ என்ற தீவிர இடதுசாரி அமைப்புடன் தவறாகத் தொடர்புபடுத்தப்பட்டு 1979 இல் கைது செய்யப்பட்டார். அவரைப்போல் சுமார் 100 அறிவுஜீவிகளை அதே குற்றச்சாட்டின் கீழ் இத்தாலிய அரசு கைது செய்தது.
பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நெக்ரி, சிறைப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு இத்தாலி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரை மீண்டும் சிறையில் அடைக்கும் முயற்சிகள் நடப்பதை அறிந்து அவர் அங்கிருந்து தப்பித்து பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்தார். நெக்ரியின் மீதான இத்தாலி அரசின் அடக்குமுறையை பிரான்ஸ் நாட்டுச் சிந்தனையாளர்கள் எல்லோருமே கண்டித்தனர். எனினும் இத்தாலி அரசு மனமிரங்கவில்லை.
பிரான்ஸில் 14 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் அவர் எழுதிய நூல்கள், பிரான்ஸ் நாட்டின் மிக முக்கியமான சிந்தனையாளர்களாகக் கருதப்படும் மிஷல் ஃபூக்கோ, அல்தூஸர், தெலூஸ் ஆகியோரின் வரிசையில் வைத்து அவரைப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தின. இதனிடையில் இத்தாலி அரசு அவரது தண்டனையை 30 ஆண்டுகள் என்பதிலிருந்து 13 ஆண்டுகளாகக் குறைத்தது. அதனால், 1997இல் மீண்டும் இத்தாலியில் நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் ஆஜராகி எஞ்சிய தண்டனை காலத்தை சிறையில் கழித்தார். அவர் சிறைக்குள் இருந்தபோதுதான் Empire உள்ளிட்ட அவரது முக்கியமான பல நூல்கள் வெளிவந்தன.
‘நெக்ரி ஆன் நெக்ரி’ நூலில் தனது சிறை அனுபவங்களை ஆங்காங்கே அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ‘சிறைக்குள் இருக்கிற ஒரு மனிதன் ஆழமான பார்வையைப் பெறுவதிலிருந்து தடுக்கப்படுகிறான். மதில் சுவர் அவனது பார்வையின் எல்லையைத் தீர்மானிக்கிறது. சிறைக்குள் இருப்பவர் வானத்தோடு கொள்கிற உறவின் மூலமே தனது பார்வையை கட்டவிழ்த்துக் கொள்கிறார். சிறைச்சாலை மீது இருக்கும் வானத்தில் எப்போதோ பறந்து செல்லும் ஒரு பறவை அல்லது ஒரு விமானம் அவை கிளர்த்தும் உணர்வு அலாதியானது’ என்கிறார் நெக்ரி.
நெக்ரியின் சிறை அனுபவங்களைப் படித்தபோது நமது நாட்டில் இருக்கும் சிறைகளைப் பற்றிய நினைவு நெஞ்சில் சுழன்றது. கொரோனா காலத்தில் சிறைவாசிகளைப் பிணையில் விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் தொடர்ந்து அழுத்தம் தந்ததும், ஆணைகளைப் பிறப்பித்ததும் மிகப்பெரிய ஆறுதல்.
சிறைவாசிகளைப் பற்றி நாம் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. எத்தனையோ அமைப்புகள் இருக்கும் இந்த நாட்டில் சிறைவாசிகளின் உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்கு ஒரு வலுவான அமைப்பு இல்லை.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நான் ஒரு தனிநபர் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து இருக்கிறேன். Representation of Peoples (Amendment Act), 2024 என்ற அந்த மசோதா சிறைவாசிகளுக்கும் வாக்குரிமையை அளிப்பதற்கானது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 62(5) தண்டனை சிறைவாசிகளுக்கும் விசாரணை கைதிகளுக்கும் வாக்குரிமையை மறுக்கிறது. இது மிகப்பெரிய அநீதியாகும். இந்தியாவில் உள்ள 1350 சிறைகளில் அடைபட்டிருக்கும் சிறைவாசிகளில் 70% பேர் விசாரணைக் கைதிகள் ஆவர். ஒருவருக்குத் தண்டனை கொடுக்கப்படுவதற்கு முன்பே அவரது வாக்குரிமையைப் பறிப்பது அடிப்படை உரிமைக்கு முரணானது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறைவாசிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அதுபோல நமது நாட்டிலும் அந்த உரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த தனிநபர் சட்ட மசோதாவை நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அது எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது தெரியாது. ஆனால், என்றாவது ஒருநாள் இந்தியாவிலும் சிறைவாசிகள் வாக்குரிமையைப் பெறலாம். அதற்கான துவக்கப் புள்ளியாக இந்த தனிநபர் மசோதா அமையும் என்று நான் நம்புகிறேன்.