தமிழில் ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ உள்ளம் கேட்குதே’, ‘கண்டநாள் முதல்’,‘ பிதாமகன்’ போன்ற படங்களில் நடித்தவர் லைலா. திருமணத்துக்குபின் மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆனதால் பல ஆண்டுகள் நடிப்பதை நிறுத்தி வைத்து இருந்தார். பின்னர், கார்த்தியின் சர்தார் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் வந்த விஜயின் கோட் படத்திலும் சின்ன கேரக்டரில் வந்தார். இந்நிலையில், ஈரம் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்த ‘சப்தம்’ படத்தில் வில்லத்தனமான ரோலில் நடித்து இருக்கிறார்
‘சப்தம்’ படத்தில் லட்சுமிமேனன், சிம்ரன், லைலா என 3 ஹீரோயின்கள் நடித்து இருந்தாலும், அது பேய் படம் என்பதால், யாருமே ஆதிக்கு ஜோடி இல்லை. டாக்டராக லட்சுமிமேனன் வருகிறார். லைலாவும் டாக்டர் என்றாலும், அவருக்கு வில்லத்தனமான வேடம். அதிலும் நல்லது செய்யும் சிம்ரனை கொல்லும் வில்லத்தனமான வேடம். அதனால், படம் பார்த்தவர்கள் லைலாவை பாராட்டுகிறார்கள். முதன்முறையாக இந்த படத்துக்காக சொந்த குரலில் பேசியிருக்கிறார் லைலா. சப்தம் படத்தை தொட ர்ந்து தமிழ், தெலுங்கில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்.
பொதுவாக, லைலா என்றால் அவரின் சிரிப்புதான் பலருக்கும் நினைவு வரும். ஆனால், சப்தம் படத்தில் அவருக்கு வில்லிவேடம் என்பதால் அந்த அக்மார்க் சிரிப்பை உதிர்க்காமலே படம் முழுக்க நடித்து இருக்கிறார். ‘‘உங்களால் எப்படி சிரிக்காமல் இருக்க முடிந்தது’’ என்று அவரிடம் கேட்டால், ‘‘நான் சிரித்துக்கொண்டு இருந்தேன். டாக்டர்தான் படப்பிடிப்பில் அதை நிறுத்த கஷ்டப்பட்டார் என்கிறார். நானும் சிம்ரனும் பல ஆண்டுகளாக ப்ரண்ட்ஸ். இதில் இணைந்து நடித்தது சந்தோஷம்’’ என்கிறார்.