தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோயினாக, முத்தக்காட்சியிலும் அதிரடி காட்டிய நடிகை கே.டி.ருக்மணி.
கடலூரைச் சேர்ந்தவர் ருக்மணி. வேளாளர் மரபில் வந்தவர். குடும்பத்தின் வறுமை காரணமாக ஏழாவது வயதிலேயே மேடை ஏறியவர். நாடக உலகில் தொடர்ந்து நடித்து, அதன்மூலம் இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று நடித்து அந்த நாளிலேயே பேசப்பட்டவர்.
‘பக்கா ரவுடி’ , ‘ டேஞ்சர் சிக்னல்’, ‘டூபான் குயின்’, ‘மின்னல் கொடி’. ‘வீர ரமணி’, ‘ஜெயபாரத்’ போன்ற ஆக்ஷன் படங்களில் ஹீரோயினாக ஜொலித்தவர் கே.டி.ருக்மணி. நல்ல அழகும், நடிப்புத் திறனும் கொண்ட கே.டி.ருக்மணியை அறிமுகப்படுத்தியவர் டைரக்டர் ராஜா சாண்டோ. அவர் நடத்தி வந்த மவுனப்பட ஸ்டூடியோவின் சார்பில், அவரே இயக்கிய ‘பேயும் பெண்மணியும்’ என்ற மௌன படத்தில் ருக்மணியை நடிக்க வைத்தார். அந்தப் படம் இந்தியா முழுதும் பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு ‘ பாரிஜாத புஷ்பஹரணம்’ என்ற தமிழ் பேசும் படத்தில் ருக்மணி நடித்தார்.
நாடக உலகில் கொடி கட்டி பறந்த டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமாக நடத்தி வந்த ‘மேனகா’ கதையை வாங்கி , அதைத் திரைப்படமாக எடுத்தார் டைரக்டர் ராஜா சாண்டோ.
மேனகா படத்தில் முத்தங்கள் நிறைந்த ஒரு காதல் காட்சி இருந்தது. அக்கட்சியில் நடிக்க சண்முகம் அண்ணாச்சி கூச்சப்பட்டு தயங்கினாராம். அந்த காட்சியில் கே.டி.ருக்மணியை அவர் கட்டி அணைக்க வேண்டும். ருக்மணியின் கைவிரல்களில் தொடங்கி தோள் வரை சுமார் 20 முத்தங்கள் பதிக்க வேண்டும். காட்சியை விவரித்த போது, சண்முகம் அண்ணாச்சி கூச்சத்தால் நெளிந்திருக்கிறார். ராஜா சாண்டோ, ‘அழகான பெண்ணை முத்தமிட இப்படி பயப்படுகிறாயே… பயப்படாம செய்டா’ என்று சொல்லியிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த ருக்மணி, அண்ணாச்சியைப் பார்த்து, “இது நடிப்பு தானே செய்யுங்கள்” என்று புன்னகைத்தாராம். தமிழ் சினிமாவில் முத்தத்திற்கு முன்மொழிந்த முதல் நாயகி இவர்தான். நாடக மேடைகளில் மௌனப் படங்களில் தனது அழகையும் திறமையையும் வெளிப்படுத்திய ருக்மணி, பேசும் சினிமாவிலும் கலக்கினார்.
1937 ல். வந்த ‘மின்னல் கொடி’யில் பழிக்கு பழி வாங்கும் வேடத்தில் ஒரு ஆணைப் போல உடை அணிந்து நடித்தார் ருக்மணி.
ஏழைகளை கொள்ளையடிக்கும், இளம் பெண்களை சூறையாடும் பண்ணையார்களை, ஜமீன்தார்களை அடித்து அவர்களிடம் இருந்து பொருட்களை எடுத்து, அதை ஏழைகளுக்கு வழங்கி, தலைமுறைவாக வாழ்ந்து வரும் மின்னல் கொடியை பிடிக்க காடு மலை எல்லாம் தேடி அலையும் போலீஸ் அதிகாரி, ஒரு குளத்தில் குளித்துவிட்டு வந்து ஆணுடையை அணியும் மின்னல் கொடியின் அழகில் மயங்கி அவரை பிடிக்க மறந்து. அவருடன் காதல் கொள்வார். மின்னல் கொடி படத்தின் கதையில் ருசியான பல காதல் காட்சிகளும். குளத்தில் குளிக்கும் இளமை துள்ளல் காட்சிகளும் கண்டு. இப்பட்த்தைப் பார்த்து அன்றைய மைனர்கள் மயங்கி உருகினார்கள். இளைஞர்கள் பல தடவை படத்தை பார்த்து ரசித்தார்களாம்.
அதேபோன்று முகமூடி அணிந்து. குதிரையில் சவாரி செய்த. காட்சிகள் அன்றைக்கு ரசித்து பார்க்கப்பட்டன. ஒரு பெண் குதிரையில் சவாரி செய்து பறக்கிறாரே, சண்டை செய்கிறாரே, என்று பெண்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டு படத்தை பலதடவை கண்டு ரசித்தார்கள்.
” ஜாக்கி போல பேண்ட் அணிந்து கொண்டு, தலையில் கருப்புத் தொப்பி அணிந்து கொண்டு, கேமரா முன்பு கே.டி.ருக்மணி நின்றால் ஒரு கலை உலக வீராங்கனையாகத்தான் காட்சி தந்தார். அடுத்த படத்தில் 3.5 ஹார்ஸ்பவர் மோட்டார் சைக்கிளில் பாய்ந்து போவார். அந்த நாளில் ஸ்டண்ட் படம் என்றால் உடனே முதலில் ருக்மணி நினைவு தான் வரும்” என்கிறார் எழுத்தாளர் அசோகமித்திரன்