இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அங்குள்ள 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளதாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கென்யாவில் இந்திய காகங்கள் ஏற்படுத்தும் பிரச்சினை என்ன?
இந்தியாவில் மமனித வாழ்வின் ஓர் அங்கமாக காகங்கள் கருதப்படுகின்றன. புராணங்களில் சனீஸ்வரனின் வாகனம் என்றே காகம் கூறப்படுகிறது. இதனால், நம்மூரில் காகங்களுக்கு தனி மவுசு உள்ளது. நம் முன்னோர்கள் காகம் வடிவில் உலாவுவதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாளில் படையலிட்ட உணவை முதலில் கொடுப்பது காகங்களுக்குதான்.
ஆனால், இந்தியாவில் பிரச்சினையில்லாத காகங்கள் கென்ய நாட்டில் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன.
இந்திய காகங்களை கென்ய நாட்டில் குங்குரு, குராபு என்ற பெயர்களில் அழைக்கின்றனர். அவை, இந்தியா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளிலிருந்து வந்தவை என்று கருதப்படுகிறது. 1890-களில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து காகங்கள் கென்யாவுக்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த சான்சிபார் தீவுக்கூட்டத்தில் கழிவுப் பிரச்னையை கையாள காகங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், அதே காகங்கள் தற்போது கென்யாவுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளன. அவை வன உயிரினங்களை வேட்டையாடுவதாகவும், சுற்றுலா தலங்களில் பெரும் தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள கோழிப் பண்ணைகளில் உள்ள குஞ்சுகளைத் தாக்குவதன் மூலமும் காகங்கள் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இந்திய காகங்கள், கோழிக் குஞ்சுகளை ஆவேசம் கொண்டு தாக்குகின்றன. மற்ற பறவைகளின் முட்டை மற்றும் குஞ்சுகளை தாக்கி, அவற்றின் கூடுகளை அழிக்கின்றன. இதனால் வீவர்ஸ் மற்றும் வாக்ஸ் பில் போன்ற சிறிய உள்நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளன கென்ய இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
“இந்திய காகங்கள் பறவைகளை மட்டும் வேட்டையாடாமல் பாலூட்டிகள், ஊர்வனங்கள் போன்றவற்றைவும் கொல்கின்றன. இது பல்லுயிர் பெருக்கம் மீது பேரழிவை ஏற்படுத்துகிறது” என்று நெதர்லாந்தைச் சேர்ந்த பறவைகள் நிபுணர் ஜாப் கிஜ்ஸ்பெர்ட்சன் தெரிவித்துள்ளார்.
கென்யாவில் பறவைகளை மட்டுமன்றி மனிதர்களுக்கும் இந்திய காகங்கள் பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளன. மொம்பாசா நகரில் சுவர்கள் மற்றும் கூரைகளில் காகங்கள் எச்சமிட்டு அசிங்கப்படுத்துவதாகவும், தலை மீது எச்சமிடுவதால் மர நிழல்களில் ஒதுங்கவே அஞ்சும் சூழல் இருப்பதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.
இப்படி எல்லைமீறிப் போகும் காகங்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த, கென்யாவில் சுமார் 10 லட்சம் காகங்களை கொல்லும் முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். அதன்படி முதல்கட்டமாக கென்ய நகரங்களான வாடாமு மற்றும் மலிந்தி ஆகிய பகுதிகளில், ஜூன் 30 முதல் காகங்களுக்கு விஷம் கலந்த உணவு தந்து கொல்லும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கென்யாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுலாத் துறையினர், உணவகத் துறையைச் சேர்ந்தவர்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, அதனடிப்படையில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. காகத்தைக் கொல்லும் விஷத்தை இறக்குமதி செய்ய, லிட்டில் கென்யா கார்டன்ஸ் என்ற நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.
கென்யா அரசின் இம்முடிவு மனிதாபிமானமற்ற செயல்முறை என விலங்கின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காகங்களுக்கு விஷம் கொடுப்பதற்குப் பதிலாக மரணம் அல்லாத மாற்று முறைகள் ஆராயப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.