நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்கிற பெயரில் வெளியாக உள்ளது. 2டி நிறுவனம் சார்பில் சூர்யா, ஜோதிகா இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சி செப்டம்பர் 23 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கார்த்தியின் சிறுத்தை திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற காமெடி காட்சியில் சந்தானமும் கார்த்தியும் நடித்த காட்சியை திரையில் காட்டி நாங்கள் இப்போது உங்களுக்கு லட்டு தரப்போகிறோம். என்று சொல்லவும். பார்வையாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். காரணம் திருப்பதி லட்டு பிரசாத சர்ச்சை பரபரப்பாக இருப்பதால் ரசிகர்கள் கைதட்டல் அதிகமானது.
ஆனால் சுதாரித்துக் கொண்ட கார்த்தி வேண்டாம் எனக்கு லட்டு வேண்டாம் இது சினிமா விழா சர்ச்சையான லட்டு வேண்டாம் என்று சொல்லி கடந்து விட்டார். ஆனால் இது எப்படியோ ஆந்திர துணை முதல்வராக இருக்கும் நடிகர் பவன் கல்யாண் காதுகளுக்கு வேறு மாதிரி போய் சேர்ந்திருக்கிறது. அவர் உடனே மீடியாக்களிடம் ஒரு நடிகர் சினிமா விழாவில்கூட லட்டு பற்றி கேலியாக பேசியிருக்கிறார். இது அங்கே பேசக்கூடிய விஷயம் அல்ல. நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால் ஏதாவது பேசுவதற்கு முன்னால் யோசித்துப் பேசுங்கள். சனாதன தர்மத்தைக் காப்பாற்றுங்கள் என்று கண்டித்தார். இதனை கேள்விபட்ட கார்த்தியும் பவன் கல்யாண் அவர்களே உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக எப்போதும் பண்பாட்டுடன் பிடிப்பாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இப்போது பரபரப்பாக மாறியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் மீது இருக்கும் கோபத்தை இந்து மத சாயம் பூசி அதனை மாநிலம் முழுவதும் பரவச்செய்து வருகிறார்கள் சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் அதில் கார்த்தியும் மாட்டிக்கொண்டிருக்கிறார். அவர் லட்டு பற்றி சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை. சினிமா விழாவில் அரசியல் சர்ச்சை உள்ள லட்டு பற்றி பேச வேண்டாம் என்பதையே வலியுறுத்தினார். இதை பவன் கல்யாணிடம் சொன்னவர்கள் தவறாக சொல்லி அவரையும் கோபத்தின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தி விட்டார்கள்.
சூர்யா, கார்த்தி திரைப்படங்களுக்கு ஆந்திராவில் எப்போதுமே ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்த பிரச்சனை பூதாகரமாகி எங்கே வசூல் பாதித்து விடுமோ என்கிற அச்சத்தால் கார்த்தி உடனே மன்னிப்பு கேட்டு விட்டார்.