தனராஜ் இயக்க, சமுத்திரக்கனி நடிக்கும் படம் ராமம் ராகவம். அப்பா, மகன் பாசத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த கதைக்கரு உருவாகி உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் சமுத்திரக்கனி பேசியது
‘‘வாழ்க்கையில் கடைசி கால கட்டத்தில், நாம பண்ணிய படங்களை நினைத்து பார்த்தால், 10 படங்கள் நல்லா படங்களாக இருக்கணும். அப்படிப்பட்ட நல்ல படங்களை இயக்கியவர்கள், இந்த விழாவுக்கு வந்து இருக்கிறார்கள். அதுவே எனக்கு இன்னும் மனநிறைவு. இந்த பட விழாவுக்கு என்னை வைத்து முக்கியமான படங்களை இயக்கிய ‘சாட்டை’ அன்பழகன், ‘சங்கத்தலைவன்’ மணிமாறன், ‘வெள்ளை யானை’ சுப்ரமணிய சிவா, ‘சித்திரைச் செவ்வானம்’ ஸ்டன்ட் சில்வா, ‘ரைட்டர்’ பிராங்க்ளின், ‘திரு. மாணிக்கம்’ நந்தா பெரியசாமி, ‘தலைக்கூத்தல்’ ஜெயபிரகாஷ், ‘சங்கத்தலைவன்’ மணிமாறன் ஆகியோரை விருந்தினராக அழைத்து இருக்கிறேன். இந்த படங்கள் என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானவை.
அதேபோல், பல படங்களில் என்னுடன் நடித்த தம்பி ராமையாவையும் அழைத்து இருக்கிறேன். இந்த படத்தை இயக்கி, நடித்துள்ள தன்ராஜ் தெலுங்கில் பிரபல நடிகர். அங்கே வெண்ணிலா கபடி குழு ரீமேக்கில் சூரி ரோலில் நடித்தவர். அங்கே 100 படங்களில் நடித்தவர். அவருடன் இணைந்து அங்கே பல படங்ளில் நடித்து இருக்கிறேன். ஒருநாள் படப்பிடிப்பில் கேரவனில் இருந்து செட்டுக்கு போகிற போக்கில் ஒன்றரை நிமிஷத்துல இந்த கதையை சொன்னார். என்னை கரு மிகவும் கவர்ந்தது. தவிர, இந்த படத்தின் கதாசிரியரும் சிவாவும் பிரபலமானவர். நான் நடித்த, வித்தியாசமான படமான விமானத்தை இயக்கியவர் . கதையைக் கேட்டதும், ‘நான் அந்த அப்பா கேரக்ரில் நடிக்கிறேன்’ என்றேன். தமிழ், தெலுங்கில் இந்த படம் உருவாகிறது. தெலுங்கில் நானே டப்பிங் பேசினேன்.
நீ சொல்ல வர்றது முக்கியமான விஷயம். இன்றைய சமூகத்துக்குத் தேவையான விஷயம். தமிழ்நாட்டுல கூட இப்படி 15 கேஸ் நடந்திருக்கு. பல குடும்பங்களை புரட்டி போட்ட கேஸ் அது. வெளில இருந்து பார்த்தா அப்பா-மகன் கதையா தெரியும். ஆனா உள்ளுக்குள்ள நீ வச்சிருக்கிறது ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயம். இந்தப் படம் பார்த்து, ஒரே ஒரு பையன் திருந்திட்டா போதும், இந்தப் படம் மாபெரும் வெற்றி. நம்ம பிள்ளை நாம நினைப்பது மாதிரி இல்லையேனு பல அப்பாக்கள் தவிக்கிறார்கள்.’’ என்றேன். நல்ல எண்ணம், நல்ல மனசு பலரை மாற்றும். நல்லது செய்ய வேண்டாம். நல்லதே நினைத்தால் போதும் என்ற கால ஓட்டத்தில் நாம் வாழ்கிறோம். எப்போதும் நல்ல படைப்பை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இரு கரம் நீட்டி வரவேற்று இருக்கிறார்கள். பணத்தை விட, எத்தனை பேரை மனசு கொள்ள அடிக்குதுங்கிறதுதான் ஒரு படைப்புக்கு முக்கியம். ராமம் ராகவம் அப்படிப்பட்ட நல்ல படம்.