மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடக்கும் கலவரங்கள், கொலைகள், பெண்கள் நிர்வாண ஊர்வலம், பாலியல் குற்றங்கள் குறித்து எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
அப்போது நடந்த விவாதத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டு சம்பவத்தை ஒப்பிட்டுப் பேசினார். அவர் பேச்சிலிருந்து,,
’திமுக உறுப்பினர் கனிமொழி இந்த அவையில் மகாபாரதத்தில் இருந்து திரௌபதியைப் பற்றி பேசினார். ஆம், மகாபாரதத்தில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டார். நான் மறுக்கவில்லை. பெண்களை பொறுத்தவரையில், மோசமாக அவர்கள் நடத்தப்படுவதும் தவறாக விமர்சிக்கப்படுவதும் எங்கள் ஒவ்வொருவருக்கும் வலியையே தருகிறது. இந்த அவைக்கும் கனிமொழிக்கும் நான் ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன். அதுவும், புனிதமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த மார்ச் 25, 1989-ல் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன்.
அன்றைய தினம் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலை அங்கிருந்தவர்களால் இழுக்கப்பட்டது. அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், அவரைப்பார்த்து சிரித்தனர்… நகைத்தனர்! அப்படியான நீங்கள், இன்று கௌரவ சபா பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள் திரௌபதி பற்றி பேசுகிறீர்கள்?! திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா? நீங்கள்தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள்.
அந்த நாளில்தான் ஜெயலலிதா ‘இனி நான் முதல்வராகாமல் அவைக்கு வரமாட்டேன்’ எனக்கூறி சென்றார். சொன்னபடியே செய்தார். அன்று ஜெயலலிதாவை பேசியவர்கள், இன்று திரௌபதி பற்றி பேசுவது, அதிர்ச்சியாக இருக்கிறது.’ என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
1989 மார்ச் மாதம் தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் நடந்த சம்பவம் இன்று வரை அரசியல் உலகில் பேசு பொருளாகவே இருக்கிறது. இப்போது நாடாளுமன்றத்திலே ஒலித்துவிட்டது.
அன்று என்ன நடந்தது குறித்து பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.
1989 மார்ச் 25ல் சட்டப் பேரவை பட்ஜெட் தொடர் பரபரப்பான அரசியல் சூழலில் நடந்தது.
1989 சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெ – ஜா என்று இரண்டு அணிகள் போட்டியிட்டு ஜானகி அணி கடுமையான தோல்வியை தழுவியிருந்தது. தோல்வியை ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி அரசியலிலிருந்து ஓய்வுப் பெற்றார். ஜெயலலிதா அணியுடன் ஜானகி அணி இணைந்தது. இணைந்த பிறகு மருங்காபுரி, மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. பொதுத் தேர்தல் தோல்வியினால் சோர்வுற்று இருந்த ஜெயலலிதா இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு போகவில்லை. அதற்கு முன் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் கூட கலந்துக் கொள்ளவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்புக்கு மட்டுமே வெளியில் வந்தார். அவருக்கு இந்த இடைத் தேர்தல் வெற்றிகள் புதிய வேகத்தைக் கொடுத்தது. கூடவே மத்தியில் டெல்லியிலிருந்து ராஜீவ் காந்தியின் ஆதரவும் கிடைக்கத் தொடங்கியது. புது பலத்துடன் பட்ஜெட் தொடருக்கு ஆயத்தமானார் ஜெயலலிதா. இவை மட்டுமில்லாமல் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதம் ஒன்றுக்காக சசிகலா கணவர் நடராஜன் வீட்டை சோதனையிட்டது தமிழ்நாட்டு காவல் துறை. இதனால் ஜெயலலிதாவுக்கு கோபமும் சேர்ந்திருந்தது.
மார்ச் 25 ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி பட்ஜெட் சமர்ப்பிக்கிறார். 13 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த திமுகவும் வேகமாக இருந்தது. புதிய ஆட்சியின் முதல் பட்ஜெட். திமுகவினர் உற்சாகமாய் இருந்தார்கள். ஆனால் சட்டப் பேரவியில் கலாட்டா நடக்கலாம் என்ற தகவல்களும் அவர்களுக்கு கிடைத்திருந்தது.
அதிமுகவின் மதுசூதனனும் ஏ.வி. கிருஷ்ணமூர்த்தியும் தொண்டர்களைப் போன்ற அடியாட்களை சட்டப் பேரவை வளாகத்தில் வேன்களிலும் லாரிகளிலும் கொண்டு வந்திருந்தார்கள்.
சட்டப் பேரவை சபாநாயகர் தமிழ்க்குடிமகனின் திருக்குறள் உரையுடன் தொடங்கியது.
சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத்தலைவர் குமரி அனந்தன் எழுந்து, ”ஜெயலலிதா கடிதம் விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் துரை, சபையின் உரிமையை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருகிறோம்’ என்றார்.
ஜெயலலிதாவும் எழுந்து ஆவேசமாக பேசினார்.
’பட்ஜெட் உரை முடிந்த பிறகு திங்கட் கிழமை அந்தப் பிரச்சினையை பார்க்கலாம்’ என்றார் சபாநாயகர். ஆனால் அதிமுக. காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
முதல்வர் கருணாநிதி பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்தார். உடனே ஜெயலலிதா எழுந்து கருணாநிதியைப் பார்த்து கிரிமினல் பட்ஜெட்டை படிக்கக் கூடாது என்று கூறினார். உடனே கருணாநிதி மைக்கை மூடிவிட்டு ஜெயலலிதாவை நோக்கி எதோ கூறினார். அதன் பின் தள்ளுமுள்ளு நடந்திருக்கிறது. மைக்குகளும் செருப்புகளும் பறந்திருக்கின்றன. தங்கள் தலைவரை பாதுகாக்க இரண்டு கட்சியினரும் தலைவர்களை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்திருக்கிறார்.
அப்போது நடந்த விஷயங்கள்தாம் இன்று வரை சர்ச்சையாக இருக்கின்றன. ஜெயலலிதா சேலையை துரைமுருகன் இழுத்தார் என்று தொடர்ந்து கூறப்படுகிறது. அதிமுகவினர் முதல் இன்றைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை இந்தக் குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள்.
ஆனால், அந்த சம்பவத்தின் போது ஜெயலலிதாவுடன் இருந்து அவரை பாதுகாத்த திருநாவுக்கரசர் மறுக்கிறார். தள்ளுமுள்ளு நடந்தது ஆனால் சேலை இழுத்தததெல்லாம் அதிகப்படியாக சொல்லப்படுபவை என்று மறுக்கிறார்.
அன்று திமுகவிலும் இன்று திமுகவுக்கு எதிர்ப்பாளராகவும் இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் சேலை இழுக்கும் சம்பவம் நடக்கவில்லை என்று பதிவிட்டிருக்கிறார். துரைமுருகன் மிகத் தள்ளி அமர்ந்திருந்தார். அவர் ஜெயலலிதா அருகிலே வரவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அதிமுகவினர் இதை மறுக்கிறார்கள். துரைமுருகன் ஜெயலலிதா சேலையை துரைமுருகன் இழுத்தார். கருணாநிதி கெட்ட வார்த்தையால் திட்டினார். திமுகவினர் ஜெயலலிதாவை தாக்கினர் என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது.
இது போன்று கலவரம் நடக்கும் என்று தெரிந்திருந்த பி.எச்.பாண்டியன் தனது வழக்கமான சட்டப் பேரவை உடையான வேட்டி சட்டை அணியாமல் சஃபாரி உடை அணிந்து வந்திருந்தார். அதனால் அவரது வேட்டி தப்பியது என்று வேடிக்கையாக இன்று கூறுகிறார்கள்.
கருணாநிதியின் கண்ணில் காயம்பட்டு மருத்துவர் வந்து சிகிச்சையளித்தார். மைக்காள் தாக்கப்படு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டதால் வீரபாண்டி ஆறுமுகம் மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஜெயலலிதா தலைவிரி கோலமாக சட்டப் பேரவையிலிருந்து கிளம்பினார்.
இது அன்று சட்டப் பேரவையில் நடந்த சம்பவங்கள் குறித்தான பலரின் பார்வைகள்.
பார்வைகள் பலவிதமாக இருக்கிறது. ஆனால் இன்று கேள்வி ஒன்றுதான்.