திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் நடக்கும் தெருக்கூத்து மனிதர்களின் வாழ்க்கையை பேசும் படம். இந்த நாடக ஜமாக்களில் நாயகன் கல்யாணம் ஸ்திரீ பார்ட் போட்டு ஆடி வருகிறார். திரவுபதி, குந்தி என்று வேஷம் கட்டி ஆடுகிறார். அவர் ஆடும் ஆட்டத்துக்கு போட்டி யாரும் கிடையாது. நாயகனின் அம்மாவுக்கோ மகனுக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்களே என்ற கவலை. பெண் போலவே நளினமாக மாறிப்போனதால் கூத்து தொழிலை விடச்சொல்கிறார். ஒரே ஒரு முறை அர்ஜூனன் வேடம் போட்டு ஆடிவிட வேண்டும் என்பதும், தனியாக ஒரு ஜமா ஆரம்பிக்க வேண்டும் என்பதும் நாயகனின் ஆசை. அதனால் வாத்தியார் சேத்தன் என்ன சொன்னாலும் கேட்கிறார். கூத்து வாத்தியார் மகள் அம்மு அபிராமிக்கு நாயகன் மீது சிறு வயது முதல் காதல். இதற்கு தடையாக இருப்பவர் சேத்தன். இருவரும் சேர்ந்தார்களா ? நாயகன் ஜமா தொடங்கினாரா ? என்பதே கதை.
திருவண்ணாமலை பக்கம் இருக்கும் கூத்துக் கலையை முதல் முறையாக திரையில் கொண்டு வந்து அதை வெற்றிகரமான திரைப்படமாக எடுத்திருக்கிறார் நாயகன் பாரி இளவழகன். தலை நிறைய கூந்தல், நளிமான நடை, பெண்கள் சூழ உரையாடும் இயல்பு என்று நாடக உலகத்தின் மனிதராகவே மாறிப் போயிருக்கிறார். நடிப்பும் இயல்பாக வருகிறது. குறிப்பாக பெண் தன்மை காட்டுவதற்காக முகம் சுழிக்க வைக்கும் செயல் இல்லாதது சிறப்பு. க்ளைமேக்ஸில் அதிரடி ஆட்டம் காட்டி கைதட்டல் வாங்குகிறார்.
நாயகனுக்கு அடுத்து நடிப்பில் அசத்தியிருப்பவர் அம்மு அபிராமி. கண்களாலேயே பேசுவது அவருக்கு பலமாக அமைந்து விட்டது. கூத்து வாத்தியாராக சேத்தன் பல ரூபங்களைக் காட்டி மின்னுகிறார். நாயகனின் அம்மாவாக கேவிஎன் மணிமேகலை மனதில் நிற்கிறார். மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தும் துணைக் கதாபாத்திரங்கள் படத்தை நகர்த்துகிறார்கள். பூனை என்ற பாத்திரத்தில் வசந்த் மாரிமுத்து, காலா குமார், ஏ.கே.இளவழகன், சிவ மாறன் என்று எல்லோரும் நாடக அனுபவம் உள்ள புதுமுகங்கள் என்பதால் நடிப்பில் இயல்பு தன்மை தெரிகிறது.
நடிகராக தன்னை திரையில் ரசிக்க வைத்த நாயகன் பாரி இயக்குனராகவும் முத்திரை பதித்திருக்கிறார். காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொண்ட ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா பாராட்டுக்குரியவர். வட தமிழகத்தின் வளத்தையும், தவிப்பையும் தன் கேமரா வழியே காட்டியிருக்கிறார். ஒவ்வொரு பிரேமும் அழகு.
படத்தின் இன்னொரு நாயகனாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. அதிகபட்சமாக தன் ஆளுமையைக் காட்டாமல் நாடக உலக இசையை அப்படியே வாசித்துக் காட்டியிருக்கிறார். நீயிருக்கும் உசரத்துக்கு என்ற ஒரு பாடலை பாடி எழுதியிருக்கிறார். அது நிறைவாக இருக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் மிரட்டியிருக்கிறார் இளையராஜா.
இது போன்ற மண் சார்ந்த கதையை படமாக்கும்போது திரையுலக அனுபவஸ்தர்கள் பக்கத்தில் இருந்தால் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். அருள் வரும் இடத்தில் நிற்க்கூட அனுமதிக்காத ஆதிக்க சமூகத்தின் மேட்டிமைத்தனத்தனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த காலத்திலும் இப்படி ஒரு உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியம்.
எந்த வருமானமும் இல்லாத ஒரு இடத்துக்கு பலர் போட்டி போட்டு போராடுவதும், காதலை எளிதாக கைவிடுவதும் அழுத்தமாக இல்லை. அம்மா ஆசைக்காக அர்ஜுனன் வேடம் என்பது பலமில்லாத உச்சகட்டமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இந்த ஜமா புதியது.