ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை கூடி ஆலோசனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று காலை 10 மணிக்கு மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சௌக் பகுதி வரை நடந்து போராட்டம் நடத்தவும், அதன் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுடள்ளது.
கூட்டணிக்குள் சலசலப்புகள் வருவது சகஜம்தான்: அண்ணாமலை பேட்டி
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை நேற்று டெல்லியில் சந்தித்தேன். இது வழக்கமாக நடக்கக்கூடிய ஒரு சந்திப்பு தான். கூட்டணியை பொருத்தவரை எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. பாஜகவின் மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு அதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவே கூட்டணி தொடர்பான விசயங்களை முன்னெடுத்து செல்கிறது.
பாரதிய ஜனதா கட்சிக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியின் மீதும், எந்த ஒரு தலைவரின் மீது கோபமோ, ஆதங்கமோ எதுவும் இல்லை. எல்லா கட்சியினரும் அவரவர் கட்சி வளர்ச்சி வளர வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஒரு கூட்டணியில் இருந்தாலும் அது தான் தர்மம். அதிமுக என்பது ஒரு பெரிய கட்சி. அவர்கள் வளர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதே போல் பாஜகவும் வேகமாக வளர வேண்டும், தமிழக மக்களின் அன்பை பெற வேண்டும் என்று நினைப்பதும் தவறில்லை. இது போல் நினைக்கும்போது கூட்டணிக்குள் சில சலசலப்பு வருவது சகஜம்” என்று கூறினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கர்களில் சோதனை நடத்த காவல்துறை முடிவு
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகள் திருடப்பட்டது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைக்காரப் பெண் ஈஸ்வரி, டிரைவர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து லாக்கரில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக திருடி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன.
இந்நிலையில், தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா அளித்த புகாரில் குறிப்பிட்டிருப்பதை விட அதிக அளவில் கூடுதல் நகைகள் வேலைக்காரப் பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் போலீசாரை அடுத்த கட்ட விசாரணைக்கு தள்ளி இருக்கிறது. இதையடுத்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக கூடுதல் விவரங்களை திரட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஐஸ்வர்யாவின் லாக்கரில் சோதனை நடத்தி அவரிடமும் விசாரிக்க போலீஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை இறுதிச் சடங்கை குடும்ப நிகழ்வாக நடத்த ஒத்துழைக்கவும்: அஜித் வேண்டுகோள்
நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம், கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தந்தை இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தொடர்பாக அஜித் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.