ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தயாரித்த 611 பக்க அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பல்வேறு குறைபாடுகள் இருந்துள்ளது. ஜெயலலிதா உயிரிழந்த மரண தேதியிலும் குழப்பம் உள்ளது. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தேவையில்லை; சென்னையிலேயே சிகிச்சை அளித்தால் போதும் என்று சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்” என்று விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், சுகாதார முதன்மை செயலாளருக்கு ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
என் மீது பழிபோடுவது புதிதல்ல – சசிகலா கொந்தளிப்பு
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைக்கு பதில் தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது எனக்கு ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு நான் அம்மா கரத்தை பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது இந்த பழிபோடும் படலம். ஜெயலலிதாவிற்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக, அவருடைய மரணத்தையே அரசியலாக்கினார்கள் திமுகவினர். அதற்கு நம் கட்சியினரே பலிகாடாக ஆனது தான் வேதனையான ஒன்று. என்னை அரசியலில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என்றால் அதற்கு வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம், அதற்கு அம்மா அவரின் மரணத்தை சர்ச்சை ஆக்கியதுதான் மிகவும் கொடுமையானது.
அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒரு போதும் நான் தலையிட்டதில்லை. எந்த விதமான பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து சிகிச்சை வழங்கினார்கள். அம்மாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதே போல் அம்மாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ், தி.மு.க. ‘பி’ டீமாக செயல்படுகிறார் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்களுடன் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக்கு அனுமதி கோரினோம். அது தொடர்பான உச்ச நீதிமன்ற ஆதாரங்களை சபாநாயகருக்கு நாங்கள் முறைப்படி அனுப்பி வைத்தோம். அந்த கோரிக்கை மீதான முடிவை சபாநாயகர் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டார். இது ஜனநாயகப் படுகொலை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்கியது செல்லும் என்பதற்கு ஆதாரமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. அப்படியிருக்க, முதலமைச்சர் ஆலோசனைப்படி ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி.
ஓபிஎஸ்சை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும் ஓபிஎஸ்சும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்” என்றார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: பிற்பகலில் முடிவுகள் தெரியும்
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 17-10-2022 (திங்கட்கிழமை) அன்று நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500-க்கும் மேற்பட்ட வர்கள் வாக்களித்தனர். 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாநில தலைநகரங்களில் நடந்த ஓட்டுப்பதிவுக்கு பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. இந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஏஜெண்டுகள் முன்னிலையில் அனைத்து மாநில வாக்குகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு கலைக்கப்பட்டன. பிறகு அவை 100, 100 கட்டுகளாக கட்டப்பட்டன. அந்த பணி முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பிறகு முடிவு அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு அந்தமானில் உள்ள வளி மண்டல சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக மாறும். வங்க கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ள ‘சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.