நம் நாட்டில் பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்களின் மனைவியை பெரிய அளவில் மதிப்பதில்லை. அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வந்தாலும் ஒரு பெரிய பொருட்டாக பார்ப்பதில்லை. ஆனால் அமெரிக்காவில் அப்படியல்ல… நாட்டு தலைவர்களின் மனைவியின் ஒவ்வொரு அசைவும் துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது. ஹிலாரி கிளிண்டன், மிட்செல் ஒபாமா போன்றோர் தங்கள் கணவர் அதிபராக இருந்தபோது நாட்டின் முதல் பெண்மணியாக அதிக கவனம் பெற்றார்கள்.
இவர்களுக்கு கொஞ்சமும் குறையாமல் அமெரிக்க மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் மெலனியா ட்ரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூன்றாவது மனைவியான இவர், கடந்த முரை ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் அதிக கவனம் பெற்றார். இப்போது ட்ரம்ப் 2-வது முறையாக வெற்றிபெற்றுள்ள நேரத்தில் அதேபோல் அவர் கூடுதல் கவனம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து அவர் விலகி நிற்பதாக அமெரிக்க பத்திரிகைகள் சொல்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கு மரபுப்படி நடக்கும் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. ஆனால், அதில் எதிலும் டிரம்பின் மனைவியான மெலனியா பங்கேற்கவில்லை. மிக முக்கியமாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் குடும்பத்துக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தற்காலிக அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையில் ஒரு தேநீர் விருந்து வைப்பார். அப்படி பைடனின் மனைவி அளிக்கும் தேநீர் விருந்தில்கூட மெலனியா பங்கேற்க போவதில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது ட்ரம்பின் குடியரசுக் கட்டியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ட்ரம்பின் பிரச்சாரத்திலேயே இம்முறை மெலனியா பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2016, 2020 தேர்தல்களிலும் கூட டிரம்பிற்காக அவரது மனைவி மெலனியா பிரச்சாரம் செய்து இருந்தார். ஆனால், இந்த முறை பிரச்சாரத்திலேயே கூட அவரை பார்க்கவே முடியவில்லை. அதேபோல வெற்றிக்கு பிறகு, டிரம்ப் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தபோதும் மெலனியா அவருடன் இல்லை.
இந்த நிலையில் பைடன் மற்றும் அவரது மனைவி தரும் விருந்தில் மெலனியா பங்கேற்காதது அவரது தனிப்பட்ட விருப்பம் என்று மெலனியாவின் தரப்பினர் கூறுகின்றனர். கடந்த முறை தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதை ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு முறையாக விருந்துகூட வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே வெறுப்பு உள்ளது. ட்ரம்ப் – பைடனைப் போலவே அவர்கள் மனைவிகளான ஜில் பைடன் மற்றும் மெலனியா இடையேவும் மோதல் உண்டு. அந்த வெறுப்பால்தான் அவர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறார் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
அதேபோல் ட்ரம்ப் பதவியேற்ற பிறகும், முன்போல் முழுநேரமும் வெள்ளை மாளிகையில் மெலனியா ட்ரம்ப் இருக்கப் போவதில்லை என்றும் அதற்குப் பதில் நியூயார்க்கில் உள்ள தன் மகன் பரோன் டிரம்புடன் அதிக நேரம் செலவிட இருப்பதாகவும் ட்ரம்ப் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.