முன்பெல்லாம் ஒரு படம் 50 கோடி, 100 கோடி வசூலை தொட்டாலே பெரிதாக பேசப்படும். இப்போது இந்திய படங்கள் இந்த தொகையை தொடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆயிரம் கோடி வசூலிப்பதே பெரிய சாதனையாக பேசப்படுகிறது. அதற்கேற்ப 2024 ஆண்டை பொறுத்தவரையில், இந்தியளவில் சில படங்கள் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியுள்ளன.
குறிப்பாக, சுகுமார் இயக்கத்தில் அல்லுஅர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம், ஆயிரத்து 700 கோடி வசூலை அள்ளியது. இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூலித்தது புஷ்பா2தான். 2 ஆயிரம் கோடி வரை இந்த படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு தெலுங்கு படமான கல்கி ஏடி2898 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான், பதான் படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலித்துள்ளது.
ஆனால், தமிழில் எந்த படமும் இதுவரை ஆயிரம் கோடி வசூல் என்ற சாதனை படைக்கவில்லை. இந்த ஆண்டு வெளியான விஜயின் கோட் படம் 460 கோடியும், சிவகார்த்திகேயனின் அமரன் 350 கோடியும், ரஜினியின் வேட்டையன் 255 கோடியும், ராயன், மகாராஜா படங்கள் 150 கோடிக்கு அதிகமாகவும் வசூலை ஈட்டின. ஆனால், ஆயிரம் கோடி என்பது வெறும் கனவாக இருக்கிறது.
அடுத்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைப், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி, விஜயின் கடைசி படம் ஆகியவை வர உள்ளன. இந்த படங்களாவது ஆயிரம் கோடியை அள்ளுமா என்ற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை. தெலுங்கு, இந்தி படங்களுக்கு மார்க்கெட் அதிகம். ஆனால், தமிழ் படங்களுக்கு தென்னிந்தியாவை தாண்டி பெரிய வியாபாரம் இல்லை. இந்தியில் குறைவான வசூலை அள்ளுகிறது. அதனாலேயே ஆயிரம் கோடியை எட்டி முடியவில்லை. வருங்காலத்தில் மாறலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்.